பெருந்துறை தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு எதிரான வழக்கு நிராகரிப்பு!
Perundurai Constituency Election Case : பெருந்துறை தொகுதியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜெயக்குமாருக்கு எதிரான தேர்தல் வழக்கை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதனால், அந்த தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம் .
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், கரூர், விராலிமலை ஆகிய 5 தொகுதிகளில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்கள் தேர்தல் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பெருந்துறை தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜெயக்குமாருக்கு எதிராக திமுக சார்பில் போட்டியிட்ட தோப்பு வெங்கடாசலம் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கை நிராகரிக்க கோரி ஜெயக்குமார் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
பெருந்துறை இடைத்தேர்தல் அறிவிப்புக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
இந்த மனு மீதான விசாரணை இன்று செவ்வாய்க்கிழமை ( செப்டம்பர் 8- ஆம் தேதி) நடைபெற்றது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, தோப்பு வெங்கடாசலம் தாக்கல் செய்த தேர்தல் வழக்கில் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட எந்த காரணங்களும் இல்லை. எனவே முன்னாள் எம்எல்ஏ ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவை ஏற்பதுடன் தோப்பு வெங்கடாசலத்தின் தேர்தல் வழக்கை நிராகரிப்பதாக நீதிபதி தெரிவித்தார். இதனால், பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிப்பதற்கு இருந்த தடை தற்போது நீங்கியுள்ளது. இதனால், இந்த தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க: மதுராந்தகம்- தாராபுரம் இடைத்தேர்தல்… அதிமுகவில் விருப்ப மனு விநியோகம்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
பெருந்துறை தொகுதி காலியானதன் பின்னணி
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெருந்துறை தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ ஜெயக்குமார் போட்டியிட்டு இருந்தார். இதில், அவர் 9 ஆயிரம் 693 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை திமுக சார்பில் போட்டியிட்ட தோப்பு வெங்கடாசலத்தை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தார். இந்த நிலையில், திடீரென தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த ஜெயக்குமார், அதிமுகவில் இருந்து விலகியதுடன், தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். இதனிடையே, அவரது வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் தோப்பு வெங்கடாசலம் தேர்தல் வழக்கு தொடுத்திருந்தார்.
தேர்தல் வழக்கை தொடுத்தவர் திமுகவில் இருந்து விலகல்
இந்த நிலையில், தோப்பு வெங்கடாசலமும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து விலகினார். இந்த நிலையில் தான் அவர் தொடுத்த வழக்கில் உரிய காரணம் இல்லை எனக் கூறி தேர்தல் வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதி நிராகரித்துள்ளார். முன்னதாக தோப்பு வெங்கடாச்சலம் தாக்கல் செய்த மனுவானது மக்கள் பிரதிநிதித்துவ சட்ட பிரிவு 84- இன் கீழ் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ வெற்றியை எதிர்த்தும், தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்கக் கோரியும் வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: தவெக கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது.. மாநில செயலாளர் சண்முகம் திட்டவட்டம்!