கரூர் சம்பவத்தில் முதல்வர் விஜய் கைதாகியிருந்தால் சிறைவாசம் தெரிந்திருக்கும்.. திமுக பரந்தாமன் கடும் விமர்சனம்!
DMK Paranthaman Criticism CM Vijay : கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் முதல்வர் ஜோசப் விஜய் கைது செய்யப்பட்டிருந்தால் அவருக்கு சிறை வாசம் என்றால் என்ன என்பது பற்றி தெரிந்திருக்கும் என்று திமுகவை சேர்ந்த பரந்தாமன் கடுமையாக விமர்சித்தார் .
தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தின் மீது முதல்வர் விஜய் பதிலுரை வழங்கி இருந்தார். இதில், திமுகவையும், முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவை சேர்ந்த பரந்தாமன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய 15 கேள்விகளுக்கு ஒரு கேள்விக்கு கூட முதல்வரால் பதில் கூற முடியாமல் தொடை நடுங்கி ஓடிவிட்டார். சினிமாவில் கிளைமாக்ஸ் இல் பேசுவது போன்ற டயலாக்குகளை பேரவையில் முதல்வர் பேசியுள்ளார். அமலாக்கத்துறை பதிவு செய்த எஃப் ஐ ஆர்- இல் உள்ள தகவல்களை எடுத்துக் கூறிவிட்டு ஆதாரம் போதுமா என்று முதல்வர் கேட்டுள்ளார்.
கரூர் சம்பவத்தில் விஜய் கைதாகியிருந்தால் சிறைவாசம் தெரிந்திருக்கும்
மிசாவை பற்றி பேசுவதற்கு முதல்வர் விஜய்க்கு என்ன தகுதி உள்ளது. மிசாவில் பெண்கள் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படுவதாக சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார். தமிழக முதல்வர் கரூர் சம்பவத்தில் கைதாகி இருந்தால் சிறைவாசம் பற்றி அவருக்கு தெரிந்திருக்கும் என்று திமுகவைச் சேர்ந்த பரந்தாமன் தெரிவித்துள்ளார். ஒரு பைத்தியத்தை தமிழகத்தின் சட்டத்துறை அமைச்சராக வைத்துள்ளதால் தமிழகம் படும் பாடு பெரும்பாடாக உள்ளது. அடுத்த சட்டமன்ற கூட்டத்தொடர் வருவதற்குள் இந்த பைத்தியக்கார அமைச்சரை மனநல மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். இதன் பின்னரே அவர் அமைச்சராக வந்து பணி புரிய வேண்டும்.
மேலும் படிக்க: மதுராந்தகம்- தாராபுரம் இடைத்தேர்தல்… அதிமுகவில் விருப்ப மனு விநியோகம்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
முதல்வர் விஜய்க்கு தியாக சம்பவம் எதுவும் தெரியாது
தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்தவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்கு முதல்வர் விஜய் எந்தவித பதிலும் அளிக்கவில்லை. கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை எதிர்கொள்ளக்கூடிய துணிச்சல் முதல்வர் விஜய்க்கு இருந்ததா. அந்த சம்பவத்தில் முதல்வர் விஜயை கைது செய்து சிறையில் அடைத்திருந்தால் சிறைவாசம் என்றால் என்ன என்பது அவருக்கு தெரிந்திருக்கும். கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் வழிகளை உணராத முதல்வர் விஜய்க்கு தமிழகத்தின் தியாக சம்பவங்கள் எதுவும் தெரியாது.
திமுகவை திட்டுவதற்கு எதற்காக சட்டமன்றம்
மிசா சட்டத்தில் யார் யாரெல்லாம் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்ற விவரத்தை உயர்நீதிமன்ற நீதிபதி தெளிவாக தெரிவித்துள்ளார். திமுகவினருக்கு பேச அனுமதி அளிப்பதாக சபாநாயகர் தெரிவித்துவிட்டு, துண்டு சீட்டு வந்ததும் பேச வாய்ப்பு மறுத்துள்ளார். முதல்வர் விஜய்யும், தவெகவினரும் மேடை போட்டு திமுகவினரை திட்டுங்கள். அதற்கு நாங்கள் பதில் கூறுகிறோம். ஆனால், மக்களின் வரிப்பணத்தில் நடைபெறக்கூடிய சட்டமன்றத்தில் ஆக்கபூர்வமான விஷயங்களை பேசாமல் திமுகவை திட்டுவதற்கு எதற்காக சட்டமன்றம் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: தவெக கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது.. மாநில செயலாளர் பெ. சண்முகம் திட்டவட்டம்!