மு.க ஸ்டாலினின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் விதமாக முதல்வர் பேசியிருக்கிறார் – ஏ.வ வேலு குற்றச்சாட்டு..
பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்கு வழி சொல்வதைப் போல் முதலமைச்சர் நேற்று பேசியுள்ளார். நியாயமான கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்காமல், வேறு விஷயங்களைப் பற்றி பேசியுள்ளார். முரசொலி மாறன் தபால் தலை வெளியீட்டு விழாவில் பங்கேற்றது தொடர்பாகவும் முதலமைச்சர் நேற்று முரண்பாடான கருத்துகளைத் தெரிவித்துள்ளார் என எ.வ வேலு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
செப்டம்பர் 8, 2026: சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று, திமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் கொறடாவுமான ஏ.வா. வேலு சட்டப்பேரவையில் பேசினார். அப்போது, நேற்று தமிழக முதலமைச்சர் விஜய் பேசிய கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால், முதலமைச்சர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது என சபாநாயகர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையடுத்து, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கைக்கு எதிரே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அவைக் காவலர்கள் மூலம் திமுக உறுப்பினர்கள் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர்.
மு.க ஸ்டாலினின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் விதமாக முதல்வர் பேசியிருக்கிறார்:
இதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஏ.வா. வேலு கூறியதாவது: “எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் பதிலளிப்பார் என எதிர்பார்த்தோம். நீதிமன்ற விசாரணையில் இருக்கும் வழக்குகள் குறித்து சட்டப்பேரவையில் பேசக்கூடாது. ஆனால், முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவை விதிகளுக்கு முரணாக அமலாக்கத்துறை வழக்கு மற்றும் மிசா தொடர்பாக பேசியுள்ளார்.
மேலும் படிக்க: மதுராந்தகம்- தாராபுரம் இடைத்தேர்தல்… அதிமுகவில் விருப்ப மனு விநியோகம்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
சர்க்காரியா ஆணையம் குறித்து பேசினார். முரசொலி மாறன் தொடர்பான அறிக்கையைப் படித்த முதலமைச்சர், மிசா குறித்து பேசும்போது உடல்மொழியிலும் விமர்சனமாகப் பேசியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் வகையில் முதலமைச்சர் பேசியுள்ளார்.
சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார்:
இதனால், முதலமைச்சர் பேசிய கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என சபாநாயகரிடம் வலியுறுத்தினோம். ஆனால், அவர் அதனை ஏற்க மறுத்துவிட்டார். அதுமட்டுமின்றி, அவைக் காவலர்களை வரவழைத்து எங்களை வெளியேற்றியுள்ளனர்.
சபாநாயகர் இன்று ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருகிறார். சட்டப்பேரவையில் ஜனநாயகம் கெட்டுப்போயுள்ளது. திமுக நடத்தியது ரியல் ஆட்சி; இப்போது நடப்பது ரீல் ஆட்சி.
முதலமைச்சர் விஜய் நேற்று ஆற்றிய உரையில் கிட்டத்தட்ட 28 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. எந்த முகாந்திரமும் இல்லை, ஆதாரமும் இல்லை என முடித்து வைக்கப்பட்ட வழக்குகள் குறித்தும் அவர் பேசியுள்ளார்.
மேலும் படிக்க: தர்ணாவில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்கள்.. குண்டுக்கட்டாக வெளியேற்றிய அவை காவலர்கள்..
3 விஷயங்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்:
பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்கு வழி சொல்வதைப் போல் முதலமைச்சர் நேற்று பேசியுள்ளார். நியாயமான கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்காமல், வேறு விஷயங்களைப் பற்றி பேசியுள்ளார்.
முரசொலி மாறன் தபால் தலை வெளியீட்டு விழாவில் பங்கேற்றது தொடர்பாகவும் முதலமைச்சர் நேற்று முரண்பாடான கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் பேசிய மூன்று முக்கிய விஷயங்கள் தொடர்பான கருத்துகளை சட்டப்பேரவை அவைக்குறிப்பில் இருந்து கட்டாயமாக நீக்க வேண்டும்” என ஏ.வா. வேலு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.