மதுராந்தகம்- தாராபுரம் இடைத்தேர்தல்… அதிமுகவில் விருப்ப மனு விநியோகம்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
Aiadmk Applications Distribution : தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் 3 நாள்களுக்குள் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார் .
தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் உள்ளிட்ட 7 தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளில் எப்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு மட்டும் நேற்று தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலில் அறிவித்திருந்தது. இந்த நிலையில், மேற்கண்ட இரு தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் தங்களது விருப்பம் மனுக்களை சமர்ப்பிக்கலாம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளில் அடுத்த மாதம் அக்டோபர் 6- ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு அதிமுக சார்பில் விருப்ப மனு இன்று முதல் விநியோகம் செய்யப்படுகிறது.
இன்று முதல் 3 நாள்கள் விருப்ப மனுக்கள் விநியோகம்
இந்த மனுக்களை சென்னை, ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம். ஜி. ஆர். மாளிகையில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பெற்று அதில் கேட்கப்பட்டுள்ள சுய விவரங்களை நிரப்பி சமர்ப்பிக்கலாம். இன்று செவ்வாய்க்கிழமை ( செப்டம்பர் 8- ஆம் தேதி) முதல் விநியோகிக்கப்படும் வேட்பு மனுக்களை நாளை மறுநாள் (செப்டம்பர் 10- தேதி) வரை பெற்று சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: திமுக எம்.எல்.ஏ-க்களால் எனக்கு High Pressure ஆகிவிட்டது… சபாநாயகர் பேச்சால் அவையில் சிரிப்பலை!
விருப்ப மனு கட்டணம் எதுவும் குறிப்பிடவில்லை
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பொது தொகுதி, தனி தொகுதிகளில் ஒவ்வொரு கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ரூ. 5 ஆயிரம், ரூ. 10 ஆயிரம் என வேட்பு மனு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதே போல, அதிமுக சார்பிலும் விருப்ப மனு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அதிமுக தலைமை வெளியிட்டுள்ள விருப்ப மனு விநியோக அறிவிப்பில் அதற்கான கட்டணம் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
தமிழகத்தில் காலியாக உள்ள 7 தொகுதிகள்
தமிழகத்தில் திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், கரூர், விராலிமலை ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன. இதில், இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல் அமைச்சர் ஜோசப் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்திருந்தார். இதே போல, மதுராந்தகம் தொகுதியின் அதிமுக முன்னாள் எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதியின் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் தொகுதியின் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்தியபாமா.
தேர்தல் வழக்குகள் காரணமாக இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தாமதம்
அம்பாசமுத்திரம் முன்னாள் அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா, கரூர் மற்றும் விராலிமலை தொகுதிகளின் முன்னாள் எம்எல்ஏக்களான சி. விஜயபாஸ்கர், எம். ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இதில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளை தவிர்த்து மற்ற 5 தொகுதிகளில் தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில், பெருந்துறை தொகுதி தேர்தல் வழக்கு நிராகரிக்கப்பட்ட காரணத்தால், விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: மதுராந்தகம்- தாராபுரம் இடைத்தேர்தல்… அதிமுகவில் விருப்ப மனு விநியோகம்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!