திமுக எம்.எல்.ஏ-க்களால் எனக்கு High Pressure ஆகிவிட்டது… சபாநாயகர் பேச்சால் அவையில் சிரிப்பலை!
Speaker JCD Prabhakar Criticized DMK MLAs : தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் பதிலுரைக்கு, திமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால் எனக்கு இருந்த லோ பிரஷர், ஹை பிரசராக மாறிவிட்டது என்று சபாநாயகர் ஜே. சி. டி. பிரபாகர் நகைச்சுவையாக தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது. இதில், முதல்வர் விஜய் பதிலுரையில் 3 கருத்துக்களை அவை குறிப்பில் இருந்து நீக்குமாறு திமுகவினர் வலியுறுத்தினர். இதற்கு சபாநாயகர் உத்தரவிடாத நிலையில், திமுக எம்எல்ஏக்கள இருக்கை முன்பு அமர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, திமுக எம்எல்ஏக்களை வெளியேற்றுமாறு சபை காவலர்களுக்கு சபாநாயகர் ஜே. சி. டி. பிரபாகர் உத்தரவிட்டார். பின்னர், சபாநாயகர் ஜேசிடி. பிரபாகர் பேசியதாவது: கடந்த ஞாயிற்றுக்கிழமை எனக்கு திடீரென லோ பிரஷர் ஏற்பட்டது. இதனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது, என்னை மருத்துவர்கள் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தினர். ஆனால், திங்கள்கிழமை முதல் அமைச்சர் ஜோசப் விஜய் பேரவையில் பதிலுரை ஆற்றும் போது நான் இருக்க வேண்டும் என்பதற்காக சட்டப்பேரவைக்கு வந்திருந்தேன்.
திமுக எம்எல்ஏக்களால் ஹை பிரஷர்
அப்போது, முதல்வர் விஜய் பேசிய பேச்சுக்கு, திமுகவினர் அமளியில் ஈடுபட்டதால் எனக்கு லோ பிரஷர், ஹை பிரசர்- ஆக உயர்ந்தது என்று நகைச்சுவையாக தெரிவித்தார். இதனால், அவையில் இருந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், சட்டப்பேரவை அலுவலர்கள் உள்ளிட்டோர் சிரித்தனர். சட்டப்பேரவையில் சிரிப்பலை நிலவியது. தமிழக சட்டமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை பல்வேறு துறைகள் மானிய கோரிக்கை மீது முதல்வர் விஜய் பதிலுரை வழங்கி இருந்தார். அப்போது, கடந்த திமுக ஆட்சியில் நிகழ்ந்த ஊழல் மற்றும் முறைகேடு தொடர்பாகவும், இதில், முன்னாள் முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் மற்றும் துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகவும் அமலாக்கத்துறை சுட்டிக்காட்டிய ஆவணங்களை குறிப்பிட்டு பேசியிருந்தார்.
மேலும் படிக்க: தர்ணாவில் தடுமாறிய திமுக எம்எல்ஏ.. கை கொடுத்து உதவிய முதல்வர் விஜய்.. பேரவையில் சுவாரஸ்யமான நிகழ்வு!
முதல்வர் குறிப்பிட்ட 3 கருத்துகளை நீக்க கோரி
இதை கேட்ட திமுக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்டனர். அத்துடன், சட்டப்பேரவை தலைவர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டனர். இந்த நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் சட்டப்பேரவை காலை கூடிய நிலையில், முதல்வர் பதில் உரையில் குறிப்பிட்டிருந்த, மிசா வழக்கில் முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலின் கைது செய்யப்பட்டபோது உடலில் ஏற்பட்ட காயத்தை உடல் மொழியால் விமர்சித்ததையும், சர்க்காரியா கமிஷன் தொடர்பாக பேசியதையும் அவை குறிப்பில் இருந்து நீக்க கோரி திமுக எம்எல்ஏக்கள் சபாநாயகரிடம் வலியுறுத்தினர்.
சபையில் சபாநாயகரால் சிரிப்பலை
ஆனால், சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் அனுமதி அளிக்காத நிலையில், திமுக எம்எல்ஏக்கள் மீண்டும் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதன் பின்னரே, சபாநாயகர் மேற்கண்ட நகைச்சுவையான வார்த்தைகளை கூறினார்.
மேலும் படிக்க: முதல்வர் விஜய்யின் ஆவேச பேச்சு.. உதயநிதி ஸ்டாலின் இன்ஸ்டாவில் பகிர்ந்த “சுறா” படத்தின் காமெடி காட்சி வைரல்!