இடைத்தேர்தல் களம்: அதிமுகவில் போட்டியிடப் போவது யார்?.. உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
AIADMK Probable Candidate List: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடவுள்ள உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. மதுராந்தகத்தில் முன்னாள் எம்.எல்.ஏ கனிதா சம்பத் மற்றும் தாராபுரத்தில் மகேஷ் குமார் ஆகியோரின் பெயர்கள் முன்னணியில் உள்ள நிலையில், வேட்பாளர் பட்டியல் குறித்த விரிவான தகவல்கள் இதோ!
சென்னை, செப்டம்பர் 09: தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் முதற்கட்டமாக மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, மாநில அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, அக்டோபர் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், ஒன்பதாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வேட்புமனுத் தாக்கல் தொடங்கப்பட்டுள்ள சூழலில், ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் தங்களது தேர்தல் வியூகங்களை வகுப்பதிலும் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில், முக்கிய பிரமுகர்களின் பெயர்கள் அடங்கிய உத்தேச வேட்பாளர் பட்டியல் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இதையும் படிக்க: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. திமுக நேரடியாக போட்டி.. வேட்பாளர்கள் அறிவிப்பு!
மதுராந்தகம் தொகுதியில் அடிபடும் பெயர்கள்:
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை, அதிமுக சார்பில் களமிறக்கப்படும் வேட்பாளர்கள் பட்டியலில் முன்னாள் எம்.எல்.ஏ கனிதா சம்பத் என்பவரின் பெயர் முதலிடத்தில் அடிபடுகிறது. இவர் ஏற்கனவே 2001-இல் திருப்போரூர் தொகுதியிலும், 2011-இல் மதுராந்தகம் தொகுதியிலும் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அனுபவம் கொண்டவர். கடந்த சில தேர்தல்களாகவே அவர் இத்தொகுதியில் சீட் கேட்டு வந்த போதிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர் மாற்றுக்கட்சியில் இணைந்துள்ளதால், அனுபவம் வாய்ந்த கனிதா சம்பத்திற்கு மீண்டும் வாய்ப்பு வழங்க அதிக சாத்தியக்கூறுகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதேவேளையில், அச்சரப்பாக்கம் வடக்கு ஒன்றியச் செயலாளராக இருக்கும் விவேக் என்ற விவேகானந்தன் என்பவரும் இத்தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாராபுரம் தொகுதியில் பலத்த போட்டி:
தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட பலத்த போட்டி நிலவி வருகிறது. வழக்கறிஞர் அபிராமி, ராஜா வின்சென்ட் மற்றும் பி.மகேஷ் குமார் ஆகிய மூவரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. கடந்த தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்டு சத்தியபாமாவுக்கு சீட் வழங்கப்பட்ட நிலையில், இம்முறை மகேஷ் குமார் தனக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார். இதனால் தாராபுரம் தொகுதியில் மகேஷ் குமார் வேட்பாளராக அறிவிக்கப்படவே அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: “திமுகவை இயக்கியது ரத்தீஷ் எனும் பவர் புரோக்கர்!”.. அமைச்சர் நிர்மல்குமார் முன்வைக்கும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்!
அதிமுக சார்பில் விருப்ப மனு விநியோகம்:
அதிமுக சார்பில் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில், நாளை வரை விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளன. விருப்ப மனுக்கள் பரிசீலனைக்குப் பிறகு, நாளை மாலை அல்லது அதற்கு அடுத்த தினத்தில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, திமுக தரப்பில் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து, உடனடியாக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில், மதுராந்தகம் தொகுதியில் பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் சுகன்யா என்பவரும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.