பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகமா?.. அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்.. காரணம் என்ன?
PMK Anbumani Ramadoss: சென்னையில் கடுமையான இடநெருக்கடி நிலவும் பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 26 ஏக்கரில் 15 மாடி கட்டிடம் அமைப்பது சாத்தியமற்றது என்றும், சென்னைக்கு வெளியே தனி நிர்வாக நகரம் அமைக்க வேண்டும் என்றும் அவர் தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை, செப்டம்பர் 09: தமிழ்நாடு சட்டப்பேரவையில் அண்மையில் விதி 110-ன் கீழ் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், சென்னை நகரில் சுமார் 1,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய தலைமைச் செயலக வளாகம் கட்டப்படும் என்ற முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, புதிய தலைமைச் செயலகத்தைக் கட்டுவதற்கான பொருத்தமான இடத்தை அடையாளம் காணும் பணிகளில் அரசு அதிகாரிகளும் நகரமைப்பு அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக, சென்னை பட்டினப்பாக்கத்தை ஒட்டியுள்ள பகுதியை அரசு அதிகாரிகள் புதிய தலைமைச் செயலகத்திற்காகத் தேர்வு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், அரசு அதிகாரிகளின் இந்த நகர்வுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையின் வாயிலாகக் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
இதையும் படிக்க: “We Miss You Dmk!”.. சட்டப்பேரவை நிறைவு நாளில் சுவாரசியமாக பேசிய ஆதவ் அர்ஜுனா!!
பட்டினப்பாக்கம் நெரிசல் மிகுந்த பகுதி:
சென்னை நகரின் உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து நெருக்கடிகளைச் சுட்டிக்காட்டி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகத்தைக் கட்டும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். சாந்தோம் சாலை மற்றும் பசுமைவழிச் சாலை ஆகிய பகுதிகள் ஏற்கனவே தினமும் கடுமையான போக்குவரத்து நெரிசலைச் சந்தித்து வருகின்றன. இந்த நெரிசலைக் குறைப்பதற்காகவே லூப் சாலை அமைக்கப்பட்ட நிலவரத்தில், அப்பகுதியில் வரலாற்றுச் சிறப்புமிக்க சாந்தோம் தேவாலயம், முக்கியப் பள்ளிக்கூடங்கள் மற்றும் பத்திரப் பதிவுத் துறைத் தலைவர் அலுவலகம் போன்ற பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்லும் அமைப்புகள் இயங்கி வருகின்றன. இத்தகைய நெரிசல் மிகுந்த பகுதியில் புதிய தலைமைச் செயலகத்தையும் அமைத்தால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கும் அபாயம் ஏற்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
அதிகாரிகள் அடையாளம் கண்ட இடம் சிறியது:
மேலும், 15 மாடிகளைக் கொண்ட 20 லட்சம் சதுர அடி பரப்பளவிலான பெரிய வளாகத்தைக் கட்டுவதற்கு அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ள 26 ஏக்கர் நிலம் மிகவும் சிறியது என்றும் அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார். கட்டிட விதிகளின்படி போதுமான காலியிடம், பசுமைப் பரப்பு, தடையற்ற வாகன நிறுத்த வசதிகள், உணவகங்கள், மருத்துவமனை வசதிகள் மற்றும் பொதுப் போக்குவரத்துச் சந்திப்புகள் ஆகியவற்றை அமைப்பதற்கு இந்த 26 ஏக்கர் இடம் எந்த வகையிலும் போதுமானதாக இருக்காது. உலகளவில் அவசர கதியில் நெருக்கடியான இடங்களில் கட்டப்பட்டு பின்னர் கைவிடப்பட்ட தலைமைச் செயலக வளாகங்களை உதாரணமாகச் சுட்டிக்காட்டிய அவர், தமிழ்நாடு அரசு இத்தகைய முடிவுகளில் அவசரம் காட்டக் கூடாது எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிக்க: “திமுகவை இயக்கியது ரத்தீஷ் எனும் பவர் புரோக்கர்!”.. அமைச்சர் நிர்மல்குமார் முன்வைக்கும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்!
‘தனி நிர்வாக நகரம்’ ஒன்றை உருவாக்குக:
சென்னை நகருக்குள்ளேயே குறுகிய நிலப்பரப்பில் புதிய தலைமைச் செயலகத்தை அமைப்பதற்குப் பதிலாக, சென்னைக்கு வெளியே பரந்த நிலப்பரப்பில் நவீன உள்கட்டமைப்புகளுடன் கூடிய ‘தனி நிர்வாக நகரம்’ ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதே முறையான தீர்வாக இருக்கும் என அன்புமணி ராமதாஸ் அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளார். பரந்த பரப்பளவில் தொலைநோக்குப் பார்வையுடன் புதிய நிர்வாக நகரத்தை அமைப்பதே எதிர்காலச் சென்னைக்கும் பொதுமக்கள் போக்குவரத்துக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றும், எனவே பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.