“We Miss You Dmk!”.. சட்டப்பேரவை நிறைவு நாளில் சுவாரசியமாக பேசிய ஆதவ் அர்ஜுனா!!
Aadhav Arjuna Speech: தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடரின் நிறைவு நாளில் உரையாற்றிய தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த ஆதவ் அர்ஜுனா, "எங்களை எதிர்த்து கேள்வி கேட்ட திமுகவை நாங்கள் மிஸ் பண்ணுகிறோம்" எனக் கூறினார். பேரவையில் நேரலை மூலம் வெளிப்படைத்தன்மை உருவாக்கப்பட்டு ஊழல் ஒழிக்கப்படுவதாகவும், முதலமைச்சர் விஜய்யின் வழிகாட்டலில் நிர்வாகம் நேர்மையாக நடப்பதாகவும் பெருமிதத்துடன் பேசினார்.
சென்னை, செப்டம்பர் 09: கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடந்து வந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதில், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே நடந்த காரசாரமான விவாதங்களும் கருத்துப் பரிமாற்றங்களும் தமிழக மக்களால் தீவிரமாக கவனிக்கப்பட்டு வந்தது. குறிப்பாக, இதுவரை இல்லாத அளவு பேரவை கூட்டத்தொடர் நேரலை செய்யப்பட்டதால், பொதுமக்கள் மத்தியில் இந்த கூட்டத்தொடர் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. இந்தநிலையில், பேரவை நிறைவுபெறும் நாளில், பேரவையின் விவாதங்கள் குறித்து உறுப்பினர்கள் பலரும் தங்களது உணர்வுகளையும் கருத்துக்களையும் பதிவு செய்தனர். அந்த வகையில், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆற்றிய உரை பேரவையில் பெரும் சுவாரசியத்தையும் அனல் பறக்கும் விவாதத்தையும் ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகளை ஒருபோதும் எதிரியாகப் பார்க்க வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என்று குறிப்பிட்ட அவர், பேரவையில் தங்களை எதிர்த்து கேள்வி எழுப்பும் திமுகவை மிஸ் செய்வதாகக் கூறி பரபரப்பான உரையை ஆற்றியுள்ளார்.
இதையும் படிக்க: திமுக எம்.எல்.ஏ-க்களால் எனக்கு High Pressure ஆகிவிட்டது… சபாநாயகர் பேச்சால் அவையில் சிரிப்பலை!
தவறுகளைச் சுட்டிக்காட்டுவதன் காரணம்:
ஊடகங்கள் தங்களை நோக்கி ‘திசை திருப்பும் அரசியலைச் செய்கிறார்கள்’ என்ற குற்றச்சாட்டை வைப்பதை மறுத்த ஆதவ் அர்ஜுனா, இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு தங்களுக்கு இருப்பதாகக் கூறினார். “நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, விவசாயத் துறை என ஒவ்வொரு துறையிலும் கடந்த 20 முதல் 25 ஆண்டுகளில் என்ன மாதிரியான தவறுகளும் ஊழல்களும் நடைபெற்றுள்ளன என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக 6,000 பள்ளிகளைப் பொதுப்பணித்துறை பராமரிக்கிறது என்றால், அதில் 2,000 பள்ளிகளில் கட்டமைப்பு சரியில்லை, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் இல்லை என்பதை நாங்கள் மக்களுக்குச் சுட்டிக்காட்டுகிறோம். இவ்வாறு கடந்த காலக் குறைகளைச் சொல்வது குற்றஞ்சாட்டுவதற்காக மட்டுமல்ல, அடுத்த ஆண்டிற்குள் அந்தத் தவறுகளை நாங்களே சரிசெய்வோம் என்பதைப் பதிவு செய்வதற்காகத்தான்” என்று விளக்கமளித்தார்.
சட்டமன்றத்தில் வெளிப்படைத்தன்மை:
கடந்த காலங்களில் சட்டமன்ற நடவடிக்கைகள் எவ்வாறு நடைபெற்றன என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், முன்பு எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசும் காட்சிகள் கூட ஊடகங்களில் சரியாகக் காண்பிக்கப்படாது எனக் குற்றம்சாட்டினார். ஆனால், தற்போதைய முதலமைச்சரின் துணிச்சலான முடிவால், பேரவை நிகழ்வுகள் முழுமையாக நேரலை செய்யப்படுவதைச் சுட்டிக்காட்டினார். நேரலை செய்தால் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களின் தவறுகள் வெளியே தெரியும் எனக் சிலர் எச்சரித்தபோதும், “தவறுகள் நடந்தால் மக்கள் முன்னிலையிலேயே அதைத் திருத்திக்கொண்டு நேர்மையாகச் செயல்பட வேண்டும்” என்று முதலமைச்சர் கூறியதாகத் தெரிவித்தார். இந்த வெளிப்படைத்தன்மையே ஊழலை ஒழிப்பதற்கான முதற்படி என்றும், பேரவையை நேரலை வாயிலாக சுமார் 3 முதல் 5 கோடி மக்கள் நேரடியாகப் பார்த்து ஜனநாயகத்தில் பங்கேற்பதே தங்களின் மிகப்பெரிய வெற்றி என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
இதையும் படிக்க: சூடுபிடித்த இடைத்தேர்தல் களம்.. வெற்றி பெற தீவிர வியூகம்.. பாஜகவிடம் நேரில் ஆதரவு கோரிய அதிமுக!!..
எதிர்க்கட்சிகள் எதிரிகள் அல்ல:
தொடர்ந்து உரையாற்றிய ஆதவ் அர்ஜுனா, “சட்டப்பேரவையில் எங்களை எதிர்த்து நின்று கேள்வி கேட்ட திமுகவை நாங்கள் மிஸ் பண்ணுகிறோம். கடந்த இரு நாட்களைத் தவிர மற்ற நாட்களில் மானியக் கோரிக்கை விவாதங்களின் போது மாலை 6 முதல் 7 மணி வரை அவர்கள் எங்களோடு விவாதத்தில் பங்கேற்றனர். எங்களுக்கு எதிர்க்கட்சிகளை எதிரிகளாகப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. இங்கு நடைபெறும் விவாதங்கள் வார்த்தைகளுக்கான நாகரிகப் போராக இருக்க வேண்டுமே தவிர, தனிப்பட்ட எதிரிடைப் பார்வையாக இருக்கக் கூடாது” என்று சுட்டிக்காட்டினார். மேலும், தங்கள் முதலமைச்சர் பேரவையில் கீழே அமர்ந்திருந்த ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு கைகொடுத்துத் தூக்கிவிட்ட நிகழ்வை நினைவுகூர்ந்து, தங்கள் கட்சியின் அணுகுமுறை எப்போதும் மரியாதைக்குரியதாகவே இருக்கும். தங்களுக்கு யாரையும் அழிக்கும் நோக்கம் இல்லை என்றும், மீண்டும் அடுத்த கூட்டத்தொடரைச் சீக்கிரமாகக் கூட்டுங்கள், திமுகவினர் வந்து மக்களுக்காக எங்களோடு விவாதிக்கட்டும், நாங்களும் பதிலளிக்கத் தயாராக இருக்கிறோம்” எனக் கூறி உரையை நிறைவு செய்தார்.