த.வெ.க ஆதரவு கட்சிகளின் ஆலோசனை கூட்டம்.. புதிய கூட்டணிக்கான பெயர் வெளியாகுமா? விவாதிக்கப்படும் முக்கிய விஷயங்கள் என்ன?
இந்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்காது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஆலோசனைக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை அமைச்சர்கள் ஆனந்தன், ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளனர்.
செப்டம்பர் 9, 2026: தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து கூட்டணிக்கான புதிய பெயர் மற்றும் அதன் கொள்கைகள் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் நான்குமுனைப் போட்டி நிலவிய சூழலில், தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் ஆதரவுடன் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்தது.
தவெக தலைமையில் தோழமை கட்சிகளின் ஆலோசனை கூட்டம்:
தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சி அமைத்து 100 நாட்களைக் கடந்துள்ள நிலையில், கடந்த ஜூலை 1ஆம் தேதி முதலமைச்சர் விஜய் தலைமையில் தோழமைக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். ஆனால், இடதுசாரிக் கட்சிகள் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில், கிட்டத்தட்ட இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4 மணியளவில் முதலமைச்சர் விஜய் தலைமையில் தோழமைக் கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
மேலும் படிக்க: சூடுபிடித்த இடைத்தேர்தல் களம்.. வெற்றி பெற தீவிர வியூகம்.. பாஜகவிடம் நேரில் ஆதரவு கோரிய அதிமுக!!..
கூட்டத்தை புறக்கணித்த இடதுசாரிகள்:
இந்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்காது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஆலோசனைக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை அமைச்சர்கள் ஆனந்தன், ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தைப் போலவே, இன்றைய தோழமைக் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டத்திலும் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் மதிமுக ஆகிய கட்சிகள் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கூட்டணிக்கான புதிய பெயர் வெளியாகுமா?
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணிக்கான பெயர் குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் நிலவி வருகிறது. அதேபோல், கூட்டணியின் கொள்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க: பொளக்கும் வெயில்.. 4 டிகிரி வரை அதிகரிக்கும் வெப்பநிலை.. எங்கெல்லாம் மழை இருக்கும்?
மேலும், வருகிற அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியல் களம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் நடைபெறும் இந்தத் தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.