நீட் தேர்வு அச்சம் காரணமாக மாணவர் விபரீத முடிவு – உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
Udhayanidhi Stalin Questions NEET : சென்னை பல்லாவரத்தில் நீட் தேர்வு மதிப்பெண் குறைவால் பிளஸ் 2 மாணவர் விபரீத முடிவை எடுத்த சம்பவம் அப்பகுகியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நீட் ஆட்கொல்லித் தேர்வுக்கு இன்னும் எத்தனை குழந்தைகளை இழப்பது? என எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை, செப்டம்பர் 8 : சென்னை பல்லாவரத்தில் நீட் தேர்வு மதிப்பெண் குறைவால் பிளஸ் 2 மாணவர் விபரீத முடிவை எடுத்த சம்பவம் அப்பகுகியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நீட் ஆட்கொல்லித் தேர்வுக்கு இன்னும் எத்தனை குழந்தைகளை இழப்பது? என எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார் .
நீட் தேர்வு அச்சம் காரணமாக மாணவர் விபரீத முடிவு
சென்னை பல்லாவரத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவரது மகன் சாய் அபிநவ் பிளஸ் 2 முடித்து, மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் நீட் தேர்வுக்கு படித்து வந்துள்ளார். கடந்த 2 முறை தேர்வு எழுதியும் அவருக்கு எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் சாய் அபிநவ் தனது படுக்கை அறையில் விபரீத முடிவு எடுத்துக்கொண்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க : எனது செய்கை உள்நோக்கம் கொண்டதில்லை – முதல்வர் விஜய் விளக்கம்




வெளியே சென்றிருந்த பெற்றோர் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது மகன் உயிரிழந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து உடனடியாக பல்லாவரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல் துறையினர் மாணவரின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது தொடர்பாக பல்லாவரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், நீட் தேர்வு மதிப்பெண் குறைவால் மனஅழுத்தம் காரணமாக மாணவர் உயிரிழந்த சம்பவம் பல்லாவரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார். அவர் தனது பதிவில், நீட் தேர்வின் அச்சம் காரணமாக பல்லாவரத்தைச் சேர்ந்த சாய் அபினவ் என்கிற மாணவர் தற்கொலை செய்துகொண்ட செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன். ஏற்கெனவே இரண்டு முறை நீட் தேர்வு எழுதி இருந்த நிலையில், மீண்டும் கோச்சிங் சென்டரில் இணைந்து நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த மாணவர் சாய் அபினவ், இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
இதையும் படிக்க : பூட்டிய வீட்டை நோட்டமிட்டு கைவரிசை.. சொகுசு காரில் வந்து நகை திருடிய தம்பதி கைது.. வேலூரில் அதிர்ச்சி பின்னணி!
ஈடு செய்ய முடியாத இழப்பை எதிர்கொண்டு நிற்கும் மாணவர் சாய் அபினவின் பெற்றோருக்கு என் ஆறுதலையும் – இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். நீட் ஆட்கொல்லித் தேர்வுக்கு இன்னும் எத்தனை குழந்தைகளை இழப்பது??? குளறுபடிகளும் – மோசடிகளும் நிறைந்த நீட் தேர்வை ரத்து செய்வதற்காக கழக அரசு மேற்கொண்ட சட்டப் போராட்டங்களை, இன்றைய ஆட்சியாளர்கள் இன்னும் வேகத்துடன் மேற்கொள்ள வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசிற்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.