சூடுபிடித்த இடைத்தேர்தல் களம்.. வெற்றி பெற தீவிர வியூகம்.. பாஜகவிடம் நேரில் ஆதரவு கோரிய அதிமுக!!..
Tamil Nadu Assembly Bypolls: தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜகவின் ஆதரவைக் கோரி அதிமுக நிர்வாகிகள் தமிழக பாஜக தலைவர் நயனார் நாகேந்திரனைச் சந்தித்து கடிதம் வழங்கியுள்ளனர். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற இத்தொகுதிகளில் மீண்டும் வெற்றி பெறுவோம் என அதிமுக நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சென்னை, செப்டம்பர் 09: தமிழக அரசியலில் சட்டமன்ற இடைத்தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மாநிலத்தின் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், அரசியல் கட்சிகள் தங்களது வியூகங்களை வகுக்கத் தொடங்கியுள்ளன. 2026ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் இத்தொகுதிகளை அதிமுக கைப்பற்றியிருந்த நிலையில், மீண்டும் அங்கு தங்களின் வெற்றியைத் தக்கவைத்துக்கொள்ள அக்கட்சி தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இதன் முதற்கட்டமாக, கூட்டணியில் இருந்த பாஜாகவின் ஆதரவைப் பெற அதிமுக தலைமை முடிவு செய்து, அதற்கான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளது.
இதையும் படிக்க: மதுராந்தகம்- தாராபுரம் இடைத்தேர்தல்… அதிமுகவில் விருப்ப மனு விநியோகம்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
நயனார் நாகேந்திரனிடம் ஆதரவு கடிதம்:
சென்னையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நயனார் நாகேந்திரனை, அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் நேரில் சென்று சந்தித்தனர். அதிமுக பொதுச்செயலாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இடைத்தேர்தலில் பாஜக அதிமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என வலியுறுத்தும் அதிகாரப்பூர்வ ஆதரவுக் கடிதம் வழங்கப்பட்டது. அதிமுக நிர்வாகிகள் அளித்த அந்தக் கடிதத்தை, பாஜக மாநிலத் தலைவர் நயனார் நாகேந்திரன் இன்முகத்தோடு பெற்றுக்கொண்டதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை:
ஆதரவு கோரியது குறித்து உடனடியாக பாஜக பதிலளிக்க முடியாது என்றும், மாநிலத் தலைவர் நயனார் நாகேந்திரன் கட்சித் தலைமையுடனும் உரியவர்களுடனும் கலந்தாலோசித்த பின்னரே தங்களின் முடிவை அறிவிப்பார்கள் என்றும் அதிமுக நிர்வாகிகள் விளக்கமளித்தனர். மேலும், பாஜக மட்டுமின்றி ஏற்கனவே அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த மற்றும் இப்போதும் தொடரும் பிற கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களையும் ஒன்றன்பின் ஒன்றாகச் சந்தித்து இடைத்தேர்தலுக்கான ஆதரவைக் கோர உள்ளதாக அதிமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: திமுக எம்.எல்.ஏ-க்களால் எனக்கு High Pressure ஆகிவிட்டது… சபாநாயகர் பேச்சால் அவையில் சிரிப்பலை!
பாடம் கற்பித்து வெற்றி பெறுவோம்:
கடந்த 2026 பொதுத்தேர்தலில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி வாக்காளப் பெருமக்கள் அதிமுகவின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து வெற்றி பெறச் செய்தனர். ஆனால், வெற்றி பெற்றவர்கள் வாக்களித்த மக்களை ஏமாற்றிவிட்டுச் சென்றுவிட்டதாகக் குற்றம்சாட்டிய அதிமுக நிர்வாகிகள், மீண்டும் அந்தத் தொகுதிகளில் கட்சியின் வேட்பாளர்கள் களம் இறக்கப்படுவார்கள் என்று உறுதியளித்தனர். மக்கள் மீண்டும் அதிமுகவின் மீதே நம்பிக்கை வைத்து வாக்களிப்பார்கள் என்றும், இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் உறுதியாகப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.