“28 நாட்கள்.. 170 மணி நேரம்!”.. சட்டப்பேரவை கூட்டத்தொடர் வெற்றிகரமாக நிறைவு.. முக்கிய அம்சங்கள், புள்ளிவிவரங்கள்!
TN Assembly Budget Session Concludes: தமிழக சட்டப்பேரவையின் 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு பெற்றுள்ளது. மொத்தம் 28 நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தொடரில் 170 மணி நேரம் அலுவல்கள் மேற்கொள்ளப்பட்டு, பல்வேறு முக்கியச் சட்ட முன்வடிவுகள் மற்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தொடரின் முக்கிய அம்சங்கள் மற்றும் புள்ளிவிவரங்களின் விரிவான தொகுப்பு இதோ.
சென்னை, செப்டம்பர் 09: தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2026-27ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள், மக்கள் நலன் சார்ந்த கொள்கைகள் மற்றும் முக்கிய சட்டச் சீர்திருத்தங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்ட இக்கூட்டத்தொடர், மக்கள் பிரதிநிதிகளின் சுறுசுறுப்பான பங்கேற்புடன் சட்டப்பேரவையில் பல முக்கிய மைல்கற்களை எட்டியுள்ளது. குறிப்பாக, முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிகளவிலான பொதுமக்கள், இந்த சட்டமன்ற கூட்டத்தொடரை நேரலையில் கண்டுள்ளனர். அவ்வாறு தவெக அரசின் இந்த முதல் கூட்டத்தொடரின் தொடக்கம் முதல் முடிவு வரை நடந்தவை குறித்து இக்கட்டுரையில் காணலாம்.
இதையும் படிக்க: “We Miss You Dmk!”.. சட்டப்பேரவை நிறைவு நாளில் சுவாரசியமாக பேசிய ஆதவ் அர்ஜுனா!!
தொடரின் ஒட்டுமொத்த நாட்கள், விவாத நேரம்:
இந்த பட்ஜெட் கூட்டத்தொடரானது மொத்தம் 28 நாட்கள் நடைபெற்றது. சட்டப்பேரவையின் ஒட்டுமொத்த அலுவல் நேரமாக 170 மணி நேரம் செலவிடப்பட்டு பல்வேறு துறை சார்ந்த விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதில் குறிப்பாக, பல்வேறு அரசுத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் மட்டுமே 15 நாட்கள் நடைபெற்றது. இந்த விவாதங்களில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த மொத்தம் 165 உறுப்பினர்கள் கலந்துகொண்டு தங்களது தொகுதிகளின் கோரிக்கைகளையும் கருத்துகளையும் பதிவு செய்தனர். மானியக் கோரிக்கை விவாதத்திற்காக மட்டும் 63 மணி நேரமும் 53 நிமிடங்களும் ஒதுக்கப்பட்டன.
உறுப்பினர்கள் உரையாற்றிய நேர விவரம்:
கட்சிகள் வாரியாக உறுப்பினர்கள் ஆற்றிய உரை நேரங்களைப் பார்க்கையில், ஆளும் கட்சி சார்பில் 51 உறுப்பினர்கள் 13 மணி நேரம் 28 நிமிடங்கள் உரையாற்றினர். திமுக சார்பில் 38 உறுப்பினர்கள் 23 மணி நேரம் 35 நிமிடங்களும், அதிமுக சார்பில் 37 உறுப்பினர்கள் 12 மணி நேரம் 58 நிமிடங்களும் விவாதங்களில் பங்கேற்று பேசினர். இவை தவிர பிற கட்சிகளைச் சேர்ந்த 39 உறுப்பினர்கள் மொத்தம் 13 மணி நேரம் 52 நிமிடங்கள் சட்டப்பேரவையில் தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.
வினாக்கள் நேரம், கவன ஈர்ப்புத் தீர்மானங்கள்:
மக்கள் பிரச்சனைகளை அவை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் வினாக்கள் நேரத்தில், 170 உறுப்பினர்கள் மொத்தம் 14,399 வினாக்களை எழுப்பியிருந்தனர். அவற்றின் மீது 242 துணை வினாக்களும் கேட்கப்பட்டு விவாதங்கள் நடைபெற்றன. வினாக்கள் மற்றும் விடைகள் பகுதி மொத்தம் 5 நாட்கள் நடைபெற்றது. இதில் பொதுப்பணித்துறை அமைச்சர் அதிகபட்சமாக 4 வினாக்களுக்குப் பதிலளித்தார். அவசரக் பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு மூலம் 45 விவகாரங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு, அதில் 106 உறுப்பினர்கள் 6 மணி நேரம் 45 நிமிடங்கள் விவாதித்தனர். மென்ஷன் மூலம் 59 விவகாரங்கள் எழுப்பப்பட்டு, 62 உறுப்பினர்கள் 1 மணி நேரம் 12 நிமிடங்கள் உரையாற்றினர். மேலும் கவன ஈர்ப்புக்காக மொத்தம் 929 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 253 மனுக்கள் அனுமதிக்கப்பட்டன.
இதையும் படிக்க: திமுக எம்.எல்.ஏ-க்களால் எனக்கு High Pressure ஆகிவிட்டது… சபாநாயகர் பேச்சால் அவையில் சிரிப்பலை!
சட்ட முன்வடிவுகள் மற்றும் 110 விதி அறிக்கை:
இக்கூட்டத்தொடரில் சட்டமன்ற நடவடிக்கைகளின் சிகரமாக மொத்தம் 13 சட்ட முன்வடிவுகள் பேரவையில் எடுத்துக்கொள்ளப்பட்டு, 8 அரசினர் தனித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், பேரவை விதி 110-ன் கீழ் மொத்தம் 18 முக்கிய அறிக்கைகள் மற்றும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில் முதலமைச்சர் ஜோசப் விஜய் மட்டுமே 17 முக்கிய அறிக்கைகளை பேரவையில் தாக்கல் செய்து அறிவிப்புகளை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.