மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. திமுக நேரடியாக போட்டி.. வேட்பாளர்கள் அறிவிப்பு!
Madurantakam Dharapuram By-Elections: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதி இடைத்தேர்தல்களில் திமுக போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்ட நிலையில், வேட்பாளர் பட்டியலும் யாரும் எதிர்பாராத வகையில் உடனடியாக வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை, செப்டம்பர் 09: தமிழ்நாடு அரசியலில் இடைத்தேர்தல்கள் எப்போதுமே ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே பெரும் அரசியல் களமாகவும், மக்களின் மனநிலையை வெளிப்படுத்தும் முக்கியத் தேர்வாகவும் பார்க்கப்படுகின்றன. அந்த வகையில், தமிழ்நாடு அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எதிர்கட்சியான திமுக தனது வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியானதிலிருந்தே வேட்பாளர் தேர்வு குறித்தும், கள நிலவரங்கள் குறித்தும் பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்று வந்த நிலையில், அனைத்து ஊகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிக்க: “திமுகவை இயக்கியது ரத்தீஷ் எனும் பவர் புரோக்கர்!”.. அமைச்சர் நிர்மல்குமார் முன்வைக்கும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்!
2 தொகுதிகளில் நேரடியாக களமிறங்கும் திமுக:
இந்நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் திமுக நேரடியாகக் களமிறங்கிப் போட்டியிடும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகே இந்த முக்கிய அரசியல் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்ற விரிவான ஆலோசனைக்குப் பின், இரண்டு தொகுதிகளிலும் திமுக போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் திருப்பூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய திமுக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் நேரில் பங்கேற்றுத் தொகுதியின் கள நிலவரங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
அதிரடியாக வேட்பாளர்கள் அறிவிப்பு:
சட்டப்பேரவைத் இடைத்தேர்தல் – 2026 மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.கழக வேட்பாளர்கள் – கழகத் தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு pic.twitter.com/FG9ZAOB4xI
— DMK (@arivalayam) September 9, 2026
திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு திமுக சட்டப்பிரிவு இணைச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.எம்.பி. எழிலரசனின் ஆதரவாளரான பரந்தாமன் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பரந்தாமனுக்கு, நடந்து முடிந்த 2026 பொதுத்தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில், இந்த இடைத்தேர்தலில் அவருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, கொங்கு மண்டலத்தின் முக்கியத் தொகுதியான தாராபுரத்தில் சுகன்யா என்பவர் திமுக வேட்பாளராகப் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் பங்கேற்காத செந்தில் பாலாஜி:
இதனிடையே, தாராபுரம் தொகுதி அடங்கியுள்ள கொங்கு மண்டலத்தில் கட்சியின் முக்கியத் தூணாகப் பார்க்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. வழக்கமாக கொங்கு மண்டலப் பகுதியில் எந்தவொரு தேர்தல் நடந்தாலும், அங்கு திமுகவின் தேர்தல் பணிகளையும் வியூகங்களையும் முன்னின்று நடத்துவதில் செந்தில் பாலாஜியே முதன்மைப் பொறுப்பாளராகச் செயல்பட்டு வந்தார். கோவை மற்றும் கரூர் உள்ளிட்ட கொங்குப் பகுதிகளில் கட்சியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அவர், இந்த இடைத்தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதையும் படிக்க: “We Miss You Dmk!”.. சட்டப்பேரவை நிறைவு நாளில் சுவாரசியமாக பேசிய ஆதவ் அர்ஜுனா!!
திமுக சந்திக்க உள்ள முதல் இடைதேர்தல்:
தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்த பிறகு சந்திக்க உள்ள முதல் இடைத்தேர்தல் என்பதால், இந்தத் தேர்தலில் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும் என்பதில் திமுக தீவிரமாக உள்ளது. ஆளும்கட்சிக்குத் தகுந்த அரசியல் நெருக்கடியைக் கொடுத்து, இரு தொகுதிகளையும் கைப்பற்றும் வகையில் தேர்தல் பணிகளை உடனே தொடங்குமாறு தொகுதி நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். திமுகவின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.