விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை.. சொந்த ஊர் செல்ல திட்டமா.. தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!
Special Buses Announced : தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி, வாரவிடுமுறையையொட்டி, தமிழகம் முழுவதும் நாளை முதல் ஏராளமான சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டு இயக்கப்பட உள்ளன. எந்தெந்த ஊர்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்பது குறித்த முழு விவரத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தமிழகத்தில் வருகிற செப்டம்பர் 14- ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. அதற்கு முந்தைய நாட்கள் வார விடுமுறை என்பதால் அடுத்தடுத்து 3 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதனால், ஏராளமான பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள். இதற்காக, தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம், கும்பகோணம், நாகர்கோவில், திருச்சி, திருநெல்வேலி, சேலம், மதுரை, திருப்பூர், கோயம்புத்தூர், கன்னியாகுமரி, ஈரோடு, தூத்துக்குடி ஆகிய ஊர்களுக்கு நாளை வியாழக்கிழமை 585 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
நாளை முதல் அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
இதே போல, நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை மேற்கண்ட இடங்களில் இருந்து 1,255 சிறப்பு பேருந்துகளும், அதற்கடுத்த நாள் சனிக்கிழமை 1,030 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. இது மட்டும் இன்றி, ஞாயிற்றுக்கிழமை 650 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து, நாகப்பட்டினம், ஓசூர், பெங்களூர், வேளாங்கண்ணி, திருவண்ணாமலை ஆகிய ஊர்களுக்கு செப்டம்பர் 11- ஆம் தேதி ( வெள்ளிக்கிழமை) 240 சிறப்பு பேருந்துகளும், செப்டம்பர் 12- ஆம் தேதி ( சனிக்கிழமை) 240 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
மேலும் படிக்க: மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி என பெயர் வைக்க காரணம்.. கூட்டணி தலைவர்கள் விளக்கம்!




கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு ஊர்களில் இருந்து
இதே போல, செப்டம்பர் 13- ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) 105 அரசு சிறப்பு பேருந்துகள் மேற்கண்ட இடங்களில் இருந்து இயக்கப்படுகிறது. இதே போல, கோயம்புத்தூர், திருப்பூர், பெங்களூர், ஈரோடு ஆகிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னை மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து செப்டம்பர் 11- ஆம் தேதி முதல் 13- ஆம் தேதி வரை திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ஓசூர், திருச்சி, வேலூர், கும்பகோணம் மற்றும் புதுச்சேரி ஆகிய ஊர்களுக்கு ஒவ்வொரு நாளும் 110 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
வெளியூர் திரும்புவதற்கு வசதியாக சிறப்பு ஏற்பாடு
மேலும், செப்டம்பர் 14- ஆம் தேதி ( திங்கள்கிழமை) சொந்த ஊர்களில் இருந்து பொதுமக்கள் சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக அனைத்து பகுதிகளில் இருந்து 765 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, வியாழக்கிழமை 8,666 பேரும், வெள்ளிக்கிழமை 32,171 பேரும், சனிக்கிழமை 18,772 பேரும், ஞாயிற்றுக்கிழமை 11,177 பேரும், திங்கள்கிழமை 23,740 பேரும் முன்பதிவு செய்துள்ளனர். கூட்ட நெரிசலை தவிர்க்க பயணிகள் முன்னதாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: காஞ்சிபுரத்தில் பணத்துக்காக பிரசவம் தடுத்து நிறுத்தம்.. தாய்-சிசு பரிதாபமாக உயிரிழப்பு.. குழந்தை வெளியேறியநிலையில் கொடூரம்!