தவெக தலைமையில் உருவானது புதிய கூட்டணி.. மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி என பெயர் வைப்பு..!
Secular Social Justice Victory Alliance : தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூக நீதி வெற் றி கூட்டணி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரத்தை இந்தப் பதிவில் சற்று விரிவாக பார்க்கலாம் .
சென்னை பனையூரில் அமைந்துள்ள தமிழக வெற்றிக்கழக தலைமை அலுவலகத்தில் தவெக ஆதரவு கட்சிகள் ஆலோசனை கூட்டம் இன்று புதன்கிழமை முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், காங்கிரஸ் மதிமுக, விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்து இருந்தது. இதில், தவெக தலைமையிலான கூட்டணிக்கு புதிய பெயர் சூட்டுவது, தவெக அரசின் 4 மாத ஆட்சியின் செயல்பாடு, மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் உள்ளிட்டவை தொடர்பாக முதல்வர் விஜய் விரிவாக ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை சுமார், 1:30 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற நிலையில் தவெக தலைமையிலான கூட்டணிக்கு புதிய பெயர் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி
இதில், தவெக தலைமையிலான கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனியாக களமாடியிருந்தது. தேர்தல் முடிவுகளுக்கு பின்னர், திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் அடுத்தடுத்து வெளியேறி தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவித்து, அமைச்சரவையில் இடம் பெற்று, கூட்டணியில் அங்கம் வகிக்க தொடங்கின. தவெக அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், மேற்கண்ட கட்சிகள் ஆதரவு அளித்து கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
மேலும் படிக்க: ரூ.1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் அமைவது உறுதி.. எந்த இடத்தில் தெரியுமா.. தமிழக அரசு அரசாணை வெளியீடு!
மசவெகூட்டணிக்கு விஜய் ஒருங்கிணைப்பாளர்
இதன் காரணமாக, தவெக தலைமையிலான கூட்டணிக்கு புதிய பெயர் மற்றும் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் நியமனம் செய்வது தொடர்பாக ஆதரவு கட்சிகள் கூட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. அந்த கூட்டத்தில், தவெக கூட்டணிக்கு விரைவில் பெயர் வைக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில், தவெக கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அத்துடன் இந்த கூட்டணியை முதல்வர் விஜய் ஒருங்கிணைப்பாளர் என்றும் கூட்டணிக்கு தலைவராக முதல்வர் ஜோசப் விஜய் இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் வேட்பாளர் குறித்து காங்கிரஸ் தலைவர் பதில்
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கூறுகையில், தவெக தலைமையிலான கூட்டணிக்கு பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணிக்கு மேலும் புதிய கட்சிகள் வரும். தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தவெக கூட்டணி சேர்ந்து போட்டியிடும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி தேர்தல்களை சந்திக்கும் என்று தெரிவித்தார். அப்போது, பிரதமர் வேட்பாளர் யார் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்தியா கூட்டணியின் ஒரு பகுதிதான் தவெக கூட்டணி
அதற்கு, இந்தியா கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படும் போது, அவருக்காக மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்வார் என்று மழுப்பலாக பதில் அளித்தார். இந்தியா கூட்டணியின் ஒரு பகுதி தான் தவெக கூட்டணி என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: மதுராந்தகம்- தாராபுரம் இடைத்தேர்தல்.. திமுக சார்பில் களமிறங்கும் பரந்தாமன்- சுகன்யா.. முழு பின்னணி இதோ!