இடைத்தேர்தலில் களமிறங்கும் தளபதியின் சிங்கப்பெண்கள்.. மரகதம் குமரவேல்- சத்தியபாமா குறித்த பின்னணி!
TVK Candidates Details : தமிழக இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள (மதுராந்தகம் தொகுதி) மரகதம் குமரவேல் மற்றும் ( தாராபுரம் தொகுதி) சத்தியபாமா ஆகியோர் குறித்த முழ விவரத்தை இந்தப் பதிவில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் .
தமிழகத்தில் சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், மதுராந்தகம் தொகுதிக்கு மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதிக்கு சத்தியபாமாவும் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவருமே அதிமுகவில் எம்எல்ஏக்களாக இருந்த நிலையில், அந்தப் பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தவர்கள் ஆவர். இவர்கள் குறித்த பின்னணி விவரத்தை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
மதுராந்தகம் தொகுதி வேட்பாளர் மரகதம் குமரவேல்:
மரகதம் குமரவேல் செங்கல்பட்டு மாவட்டத்தில், திருப்போரூர் வட்டம், தையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். இவரது தந்தை அதிமுகவின் முன்னாள் முதல் அமைச்சர் எம்ஜிஆரின் ராமாபுரம் தோட்டத்தில் பணிபுரிந்துள்ளார். கடந்த 2006- ஆம் ஆண்டு முதல் 2011- ஆம் ஆண்டு வரை அதிமுகவில் ஒன்றிய கவுன்சிலராக இருந்துள்ளார். 2011- ஆம் ஆண்டு முதல் 2014- ஆம் ஆண்டு வரை ஒன்றிய தலைவராக மரகதம் குமரவேல் இருந்துள்ளார். இதேபோல, கடந்த 2014- ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றியை பதிவு செய்திருந்தார்.
மேலும் படிக்க: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. த.வெ.க வேட்பாளர்கள் அறிவிப்பு.. யாருக்கு வாய்ப்பு?




தவெக வேட்பாளரை தோற்கடித்திருந்த மரகதம் குமரவேல்
தொடர்ந்து, 2021 சட்டமன்ற தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக களம் இறக்கப்பட்ட மரகதம் குமரவேல் எம்எல்ஏவாக தேர்வானார். தொடர்ந்து, மாவட்ட மகளிர் அணி செயலாளர், மாநில மகளிர் அணி துணை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். தொடர்ந்து, அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட்ட மரகதம் குமரவேல் 69,284 வாக்குகள் பெற்று தவெக வேட்பாளர் எழில் கேத்தரீனை 7,194 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, இவர் தவெகவில் இணைந்த நிலையில் அதிமுக மற்றும் திமுக வேட்பாளரை எதிர்த்து களமாட உள்ளார்.
தாராபுரம் தொகுதி வேட்பாளர் சத்தியபாமா:
இவர், திருப்பூர் மாவட்ட அதிமுக ஊராட்சி தலைவராக இருந்து வந்த நிலையில், ஊராட்சியில் சிறப்பாக களப்பணியாற்றிய இவருக்கு கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதில், கடுமையான பிரச்சாரத்துக்கு பலனாக அவர் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். அந்த தேர்தலில் 81,100 வாக்குகள் பெற்றிருந்தார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் இந்திராணியை 16,727 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்தார். தற்போது, தவெகவில் இணைந்து அந்த கட்சி சார்பில் தேர்தலை சந்திக்க உள்ளார்.
மேலும் படிக்க: மதுராந்தகம்- தாராபுரம் இடைத்தேர்தல்.. திமுக சார்பில் களமிறங்கும் பரந்தாமன்- சுகன்யா.. முழு பின்னணி இதோ!