திருவள்ளூரில் மீண்டும் அமோனியா வாயு கசிவு.. இருவரின் நிலை என்ன? பெரும் பீதியில் பொதுமக்கள்!
Ammonia Gas Leak Thiruvallur: திருவள்ளூர் மாவட்டத்தில் அரண்வாயல் பகுதியில் செயல்பட்டு வரும் பீர் தயாரிக்கும் ஆலையில் திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதில், இரு தொழிலாளர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், அரண்வாயல் பகுதியில் மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு, பீர் பாட்டில்களில் நிரப்புவதற்கு கார்பன் டை ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் டையாக்சைடு ஆகிய வாயுக்களுடன் அமோனியா வாயுவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், இந்த ஆலையில் திடீரென அமோனியா வாயை கசிவு ஏற்பட்டது. இதனால், தொழிற்சாலையில் பணியில் இருந்த பணியாளர்களில் இருவருக்கு லேசான வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. இதை பார்த்த சக தொழிலாளர்கள் உடனடியாக அவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஆலையில் அமோனியா வாயு கசிவு
இந்த தொழிற்சாலையில், பீர் தயாரிப்பின்போது, அதன் இயல்பான சுவை மாறாமல் இருக்கவும், நுரை மற்றும் புத்துணர்ச்சி குறையாமல் இருக்கவும் இந்த வாயுக்கள் பயன்படுத்தப்படுகிறது. சில வகை ப்ரீமியம் ரக பீர் வகைகளில் மென்மையான நுரை அமைப்பை ஏற்படுத்தவும், பீர் பாட்டிலுக்குள் ஆக்சிஜன் சென்று பீர் கெட்டுப் போகாமல் தடுக்கவும் நைட்ரஜன் வாயு பயன்படுத்தப்படுகிறது. அதன்படி, இந்த வகையான பீர்களை குளிர்ச்சியாக வைப்பதற்காக அமோனியா வாயுவும் பயன்படுத்தப்படுகிறது.
மேலும் படிக்க: சோலார் ஆலை அமைக்க எதிர்ப்பு.. நிலம் அளவு செய்ய வந்த அதிகாரிகள் மீது பொதுமக்கள் கல்வீச்சு.. விருதுநகரில் பரபரப்பு!




அமோனியா வாயு கசிவு தடுத்து நிறுத்தம்
இந்த சம்பவத்தை தொடர்ந்து, அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டரில் இருந்து முற்றிலுமாக அந்த அமோனியா வாயு வெளியேறுவது தடுக்கப்பட்டது. இந்த தீவிர நடவடிக்கையால் வேறு யாருக்கும் எந்த விதமான பிரச்சினையும் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. ஏற்கனவே, திருவள்ளூர் மாவட்டத்தில் கன்னிகைப்பேர் என்ற கிராமத்தில் செயல்பட்டு வந்த இறால் ஏற்றுமதி ஆலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதில், வட மாநிலங்களை சேர்ந்த 18 பெண் தொழிலாளர்கள் மூச்சு திணறல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
2- ஆவது முறையாக அமோனியா வாயு கசிவு
பலர், மருத்துவமனையில் வெகு நாட்கள் சிகிச்சையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதை தொடர்ந்து, அந்த தொழிற்சாலையில் மீதமிருந்த சுமார் 2 டன் அமோனியா வாயு பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் அடிப்படையில், அந்த இறால் பதப்படுத்தும் ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த உயிரிழப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், 2- முறையாக மீண்டும் அமோனியா வாய கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த பகுதியில் பீதி நிலவி வருகிறது.
மேலும் படிக்க: தெருநாய் கடித்து மூதாட்டி உட்பட 4 பேர் படுகாயம்! ஸ்ரீவைகுண்டத்தில் அடுத்தடுத்து அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!