மதுரையில் கார் டயர் வெடித்து விபரீதம்.. பரிதாபமாக பறிபோன இரு உயிர்கள்.. தீவிர சிகிச்சையில் 4 பேர்!
Madurai Car Accident : மதுரை மாவட்டத்தில் காரின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில், அதில், பயணித்த இருவர்கள் பலியாகி உள்ளனர். மேலும், 4 பேர் பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனையில் தீவிர சகிச்சை பெற்று வருகின்றனர். திருமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தவர் பாரதிராஜா. இவர், தனது நண்பர்களுடன் காரில் மற்றொரு நண்பரை பார்ப்பதற்காக சென்று உள்ளனர். அங்கு, நண்பர்களை சந்தித்து விட்டு மீண்டும் அதே காரில் திருமங்கலம் நோக்கி திரும்பி சென்று கொண்டிருந்தனர். அவர்களது கார் விருதுநகர்- திருமங்கலம் 4 வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென அவர்களது காரின் முன் பக்க டயர் வெடித்தது. இதில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தறி கெட்டு ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணித்த பாரதிராஜா உள்ளிட்டோர் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு உடனடியாக விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இருவர் பலி- தீவிர சிகிச்சையில் 4 பேர்
மேலும், இந்த விபத்து தொடர்பாக திருமங்கலம் காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், திருமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் பாரதிராஜா மற்றும் அவரது நண்பர் ஐடி ஊழியரான சரண் ஆகியோர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும், பலத்த காயமடைந்த 4 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: “நான் அமைச்சர்தான்.. ஆனா எனக்குள்ளும் ஒரு ரசிகன் இருக்கான்!”.. திரையரங்கில் அழுத விவகாரத்தில் அமைச்சர் விக்னேஷ் நெகிழ்ச்சி விளக்கம்!




திருமங்கலம் போலீசார் விசாரணை
இந்த விபத்தில் உயிரிழந்த இருவரின் சடலங்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து பாரதிராஜாவின் குடும்பத்தினர் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர்- திருமங்கலம் சாலையில் காரின் முன்பக்க டயர் வெடித்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விபத்தில் சிக்கியவர்கள் குறித்த விவரம்
இந்த விபத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 4 பேரின் விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. இது தொடர்பாக, போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விபத்தில் சிக்கிய காரை மீட்டு காவல் நிலையத்திற்கு போலீசார் கொண்டு சென்றனர். இது தொடர்பாக போலீசாரின் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க: கிளாம்பாக்கம் – செங்கல்பட்டு மெட்ரோ ரயில்.. விரிவான அறிக்கை தயார் செய்ய டெண்டர் வெளியீடு..