நாகர்கோவில் கைதி லாக்கப் டெத்.. அதிரடி விசாரணையில் இறங்கிய சிபிசிஐடி போலீசார்..!
Nagercoil Prisoner Lock Up Death: நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதி சவரிவர்மன் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீசார் சிறை மற்றும் சபரிவர்மன் குடும்பத்தினரிடம் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். இதனால், இந்த வழக்கு சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் அருகே உள்ள ஈத்தங்காட்டை சேர்ந்தவர் சபரிவர்மன் ( 33 வயது). இவர், மாற்றுத்திறனாளி ஆவார். இவர், தனது வீட்டின் அருகே பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார். இந்த நிலையில், அவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்து விற்பனை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. அந்த புகாரியின் அடிப்படையில், தென்தாமரை குளம் போலீசார் கடந்த ஜூலை 9- ஆம் தேதி சபரி வர்மனை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து, அவரை சிறையில் அடைத்தனர். விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிருந்த சபரிவர்மனை கடந்த ஜூலை 13- ஆம் தேதி சிறை வார்டர்கள் அடித்து கொலை செய்தனர். இது தொடர்பான விசாரணையில் சிறை வார்டர்கள் 3 பேர் மற்றும் 8 விசாரணை கைதிகள் சபரி வர்மனை கை கால்களை கட்டி கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்தது தெரிய வந்தது.
சிபிசிஐடி டிஎஸ்பி தலைமையில் விசாரணை
இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றி தமிழக டிஜிபி மகேஷ் குமார் அவர்கள் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், கன்னியாகுமரி மாவட்ட சிபிசிஐடி போலீசாருக்கு இந்த வழக்கு விசாரணை மாற்றப்பட்டது. இந்த கொலை வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் சிபிசிஐடி போலீசாரிடம் நேசமணி நகர் போலீசார் ஒப்படைத்தனர். இந்த ஆவணங்களை பெற்ற சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கினர். காவல் துணை கண்காணிப்பாளர் நவராஜ் ராஜ்குமார் தலைமையில் திருநெல்வேலி ஆய்வாளர் பிரான்சிகா, உலக ராணி மற்றும் போலீசார் விசாரணையை தொடங்கினர்.
மேலும் படிக்க: VPN, டார்க் வெப் பயன்படுத்தி வெடிகுண்டு மிரட்டல்.. அமெரிக்க மென்பொருள் பொறியாளர் சிக்கியது எப்படி?




நாகர்கோவில் சிறை – கைதி குடும்பத்தினரிடம் விசாரணை
அதன்படி, கொலை சம்பவம் நிகழ்ந்த நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அங்கு, சபரி வர்மன் அடைக்கப்பட்டிருந்த அறையில் பார்வையிட்ட போலீசார், அங்கு சில தகவல்களை கேட்டறிந்தனர். சிறையில் விசாரணை மற்றும் சம்பவம் நடைபெற்ற சிறை அறையில் கேமரா மூலமும் பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து, சபரிவர்மனின் மனைவி ஆனந்தவல்லி மற்றும் அவரது குடும்பத்தினர் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
லாக்கப் மரணத்தில் 11 பேர் கைது
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நாகர்கோவில் சிறை வார்டன், தலைமை வார்டன், சிறை காவலர் மற்றும் 8 கைதிகள் என மொத்தம் 11 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான சிறை காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, நாங்குநேரி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். இதே போல, நாங்குநேரி சிறையில் கைது செய்யப்பட்ட 8 கைதிகளிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை கொண்டனர். தொடர்ந்து, அந்த கைதிகள் அனைவரும் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
மேலும் படிக்க: 200-க்கும் மேற்பட்ட காவலர் குடும்பங்களிடம் ரூ.20 கோடி மோசடி.. பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு சிறை!!