திருவண்ணாமலையில் சோகம்.. இடுக்கு பிள்ளையார் கோவிலில் சிக்கி ஆந்திர பக்தர் பரிதாப பலி!
Tiruvannamalai Idukku Pillaiyar Temple: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கிரிவலப் பாதையில் அமைந்துள்ள இடுக்கு பிள்ளையார் கோவிலில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பக்தர் குகை இடுக்கில் சிக்கி மூச்சி திணறி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவ் கோவில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது
திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ உண்ணாமுலையம்மன் அருணாச்சலேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். அந்த வகையில், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருவது அதிகரித்துள்ளது. அதன்படி, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மணி குமார் ( 36 வயது) நேற்று வெள்ளிக்கிழமை இரவு தனது குடும்பத்தினருடன் கோவிலுக்கு வருகை தந்திருந்தார். அவர், கோவிலை சுற்றியுள்ள கிரிவலப் பாதையில் கிரிவலம் சென்று சுமார் 11 மணி அளவில் கிரிவலப் பாதையில் உள்ள இடுக்குப் பிள்ளையார் கோவிலுக்கு சென்றுள்ளார். குகை வடிவத்தில் உள்ள இந்த கோவில் பகுதியில் மணிக்குமார் படுத்தவாறு உள்ளே சென்றார். அவர், சற்று உடல் பருமனாக இருந்ததன் காரணமாக குகையில் இருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.
குகை இடுக்கில் சிக்கி உயிரிழந்த பக்தர்
அவரது குடும்பத்தினர்கள் அவரை மீட்க முயன்றும் முடியவில்லை. இதனால், மணிக்குமாருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு அங்கேயே மயங்கினார். இதை அறிந்த சக பக்தர்கள் மணிக்குமாரை போராடி குகையில் இருந்து மீட்டு வெளியே கொண்டு வந்து 108 அவசர ஆம்புலன்ஸ் மூலமாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு. மருத்துவர்கள் அவரை பரிசோதித்த போது அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்ட மணிக்குமாரின் குடும்பத்தினர் அங்கேயே கதறி அழுதனர்.
மேலும் படிக்க: நாகர்கோவில் கைதி லாக்கப் டெத்.. அதிரடி விசாரணையில் இறங்கிய சிபிசிஐடி போலீசார்..!




திருவண்ணாமலை போலீசார் விசாரணை
இதை தொடர்ந்து, மணி குமாரின் சடலம் உடல் கூறாய்வு மேற்கொள்வதற்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், மணி குமாரின் குடும்பத்தினரிடம் புகாரை பெற்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இடுக்குப் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது.
இடுக்கு பிள்ளையார் கோவில்
இந்த கோவில் சிறிய குகை போன்ற அமைப்பில் 3 வாசல்கள் உள்ளன. இங்கு வருகை தரும் பக்தர்கள் பின் வாசல் வழியாக சாய்ந்து படுத்தவாறு உள்ளே சென்று, பின்னர் கைகளை ஊன்றியவாறு நகர்ந்து முன் வாசல் வழியாக வெளியே வருவர். குகை போன்ற பகுதியில் இருந்து வெளியே வந்தவுடன் நந்தி இருக்கும். அந்த நந்தியையும், இடுக்கு பிள்ளையாரையும் பக்தர்கள் வணங்கி சென்று வருகின்றனர். இவ்வாறு செல்ல முயன்ற பக்தர் ஒருவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிழந்துள்ளார்.
மேலும் படிக்க: திருப்பூர் ஆயுதப்படை பெண் போலீஸ் தற்கொலை சம்பவம்.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்!