நீட் தேர்வுக்கு எதிராக தவெக அரசின் அதிரடி நகர்வு.. அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறிய அந்த வார்த்தை!
Minister Aadav Arjuna: நீட் தேர்வுக்கு எதிராக இளைஞர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்துக்கு தமிழக அரசின் ஆதரவு அளிக்கப்படும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார். மேலும், நீட் ரத்துக்காக தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தொடர்ந்து குரல் கொடுப்பார் என்றார்.
சென்னையில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பங்கேற்று பேசினார். அப்போது, நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் குறித்து அவர் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார். இது தொடர்பாக, அவர் கூறியதாவது: டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள் நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் மறு புரட்சி செய்ய வேண்டும். இதற்கு ஒட்டுமொத்த தமிழகமும், முதல்வர் ஜோசப் விஜய்யும் துணை நிற்போம். இதில் எப்போதும் உறுதியாக இருக்கிறோம். நீட் தேர்வு விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்ட அனிதா விவகாரத்தில் இருந்து எண்ணற்ற சகோதர, சகோதரிகளை தமிழகம் இழந்துள்ளது. அந்த உணர்வு எங்களுக்கு இருந்து வருகிறது. டெல்லியின் குரலுக்கும், தமிழகத்தின் குரலுக்கும் முழு வித்தியாசம் உள்ளது. தமிழகத்தின் குரல், முதல்வரின் குரல், தமிழக வெற்றிக் கழகத்தின் குரல், தமிழக இளைஞர்களின் குரல் ஒட்டுமொத்தமாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதாகும்.
மருத்துவத் துறையில் முதன்மை மாநிலம் தமிழகம்
இதற்கான குரல் அரசியல் ரீதியாகவும், மற்ற வலிகளிலும் சரி உறுதியாக எழுப்பி வருவோம். கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் மருத்துவ கனவை அடையும் வலி எங்களுக்கு தெரியும். நீட் தேர்வு இல்லாமல் மாணவர்களை மருத்துவர்களாக்கியது தமிழக மாநிலம். மருத்துவத் துறையில் நம்பர் 1 மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. நீட் தேர்வுக்காக உள்ள பயிற்சி மையங்களில் ஏழை எளிய மாணவர்கள் கட்டணம் கட்டி படிக்க முடியாத நிலை உள்ளது.
மேலும் படிக்க: தவெகவின் 3 மாத ஆட்சியில் 4 லாக்கப் மரணங்கள்.. சீமான் காட்டமான விமர்சனம்!




நீட் ரத்து விவகாரத்தில் உறுதியாக உள்ளோம்
ஒட்டுமொத்த தமிழக மாணவர்களின் எதிர்காலம் கருதி நீட் ரத்து விவகாரத்தில் நாங்கள் உறுதியாக உள்ளோம். எங்கள் கொள்கையை ஒட்டுமொத்தமாக மத்திய அரசும், பாஜக ஆளும் அரசும் மாணவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும். வேளாண் சட்டத்தை எவ்வாறு நீக்கினார்களோ, அதே போல, நீட் தேர்வை நீக்கக்கூடிய முக்கியமான இடத்தில் இருக்கிறோம். நிச்சயமாக பாராளுமன்றத்தில் நீட் தேர்வு வாபஸ் பெறப்படும். இதற்கு முதல்வர் விஜயின் குரல் முக்கிய குரலாக இருக்கும்.
ஊழலை தூக்கி எறியும் அரசு நடந்து கொண்டிருக்கிறது
இதற்காகவே எங்களுடைய பணிகளை நாங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். ஜாதி, மதம், பணம் இல்லாத அரசியலை உருவாக்க வேண்டும் என்று விரும்பியதன் அடிப்படையில் இந்த அரசு உருவாகியுள்ளது. இதில், முக்கியமாக தமிழகத்தில் ஊழலை தூக்கி எறிய வேண்டும் என்று பலர் விரும்பினர். இவை அனைத்தும் தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் நடந்து வருகிறது என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: தியேட்டரில் அழுது சீன் ஓட்டுவது அரசு கிடையாது… தவெக அரசை டேமேஜ் செய்த பிரேமலதா!