விஷப் பரீட்சையில் இறங்க வேண்டாம்.. முதல்வர் விஜய்யின் கர்நாடக பயணத்துக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
MK Stalin Remarks Cauvery Water Issue: காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசு நடத்தும் பேச்சுவார்த்தை எனும் சதி வலையில் தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் சிக்கிக் கொள்ளக்கூடாது என்று முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழகத்துக்கான காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசுடன் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் வருகிற ஆகஸ்ட் 3- ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கர்நாடகம் செல்ல உள்ளார். முதல்வரின் இந்த பயணம் குறித்து முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழகத்திற்கான காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கர்நாடகா அரசுடன் பேச்சுவார்த்தை எனும் சதி வலையில் தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் சிக்கி விட வேண்டாம். ஆகஸ்ட் 3- ஆம் தேதி முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்த செல்வது விஷப் பரிட்சை ஆகும். இந்த பேச்சுவார்த்தையானது பல்லாண்டு காலம் சட்டபூர்வமாக தமிழகம் போராடி பெற்ற உரிமைகளை சிதைப்பதாக அமையும்.
காவிரி விவகாரம் நீதிமன்றத்திலும் பின்னடைவை ஏற்படுத்தும்
இது நீதிமன்றத்திலும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விட அதிக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாகவே கடந்த காலங்களில் இந்த யோசனை முன் வைக்கப்பட்ட நிலையில், அதனை திராவிட முன்னேற்ற கழக அரசு உறுதியாக நிராகரித்திருந்தது. காங்கிரஸ், தமிழக வெற்றிக் கழக கூட்டணி மயக்கத்தில் தமிழகத்தின் காவிரி உரிமைகளை பனயமாக்கி விடக்கூடாது என்பதை டெல்டா மாவட்ட விவசாயிகளின் ஒருமித்த குரல் ஆகும். எனவே, அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி விவசாயிகள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க: MLA-க்களிடம் பேரம்?.. செந்தில் பாலாஜி, அசோக் குமாரிடம் தனித்தனியாக போலீஸ் கிடுக்கிப்பிடி.. !




கர்நாடக செல்லும் முடிவை முதல்வர் கைவிட வேண்டும்
எனவே, பேச்சுவார்த்தைக்காக தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் கர்நாடக மாநிலம் செல்லும் முடிவை கைவிட வேண்டும் கேட்டுக்கொள்கிறேன் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தண்ணீர் திறந்து விட வேண்டும். ஆனால், போதிய மழைப்பொழிவு இல்லாத காரணத்தால், தமிழகத்துக்கான தண்ணீரை திறந்து விட முடியாது என்று கர்நாடக அரசு தெரிவித்திருந்தது.
ஆகஸ்ட் 3- இல் தமிழகம்- கர்நாடகம் பேச்சுவார்த்தை
இதற்கு, தமிழக அரசு கடும் கண்டனங்களை பதிவு செய்திருந்தது. இந்த நிலையில், காவிரி நீர் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தமிழக முதல்வர் விஜயை, கர்நாடக முதல்வர் டி. கே. சிவகுமார் அழைப்பு விடுத்திருந்தார். அதன் அடிப்படையில், வருகிற ஆகஸ்ட் 3- ஆம் தேதி இரு மாநில முதல்வர்களின் பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது. தமிழக முதல்வரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: பழனி கோயில் நிலம் ரூ.100 கோடி என்பதே தெரியாது.. அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அதிரடி விளக்கம்!