MLA-க்களிடம் பேரம்?.. செந்தில் பாலாஜி, அசோக் குமாரிடம் தனித்தனியாக போலீஸ் கிடுக்கிப்பிடி.. !
Senthil Balaji interrogation Triplicane police: செந்தில் பாலாஜி அசோக் குமார் விசாரணை தவெக ஆட்சி கவிழ்ப்பு வழக்கில் வேகம் எடுத்துள்ளது. எம்.எல்.ஏ-க்களிடம் பேரம் பேசிய ஆதாரங்களின் அடிப்படையில் சென்னை திருவல்லிக்கேணி காவல் துறையினர் இருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை, ஜூலை 25: தமிழக வெற்றிக் கழக ஆட்சியை கவிழ்க்க எம்.எல்.ஏ-க்களிடம் கோடி கணக்கில் பேரம் பேசியதாகப் பதியப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோரிடம் சென்னை திருவள்ளிக்கேணி காவல்துறையினர் தனித்தனியாக வைத்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வலைவீசியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், சென்னை திருவள்ளிக்கேணி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும் படிக்க: நீட் தேர்வுக்கு எதிராக தவெக அரசின் அதிரடி நகர்வு.. அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறிய அந்த வார்த்தை!
ரூ.35 முதல் 50 கோடி பேரம்:
நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த அசோக் குமார், இடைத்தரகர்கள் மூலமாக யூடியூபர் திருநாவுக்கரசு என்பவரை அணுகி, த.வெ.க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ரூ.35 கோடி முதல் ரூ.50 கோடி வரை பண பேரம் பேசியதாகவும், இடைத்தரகர்களுக்கு ரூ.5 கோடி தருவதாக உறுதி அளித்ததாகவும் காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது. சென்னை, மதுரை மற்றும் பெங்களூரு ஃபைனான்சியர்கள் மூலமாக ஹவாலா முறையில் பணம் கைமாறியதற்கான முதற்கட்ட ஆதாரங்கள் கிடைத்ததை அடுத்து, அசோக் குமார் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டது.
செந்தில் பாலாஜியின் பெயர் இணைப்பு:
கைது செய்யப்பட்டவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், இதன் பின்னணியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செயல்பட்டதாகக் கூறி அவரது பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டது. கரூர் உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை அமைத்துத் தேடப்பட்டு வந்த சூழலில், கடந்த ஜூலை 8-ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் இருவரும் நிபந்தனை முன்ஜாமீன் பெற்றனர். காலை மற்றும் மாலை வேளைகளில் விசாரணை அதிகாரி முன் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவின்படி, இன்று காலை 10:30 மணியளவில் செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் இருவரும் திருவள்ளிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகினர்.
தனித்தனியாகக் கெடுபிடி விசாரணை:
துணை ஆணையர் ஜெயச்சந்திரன் தலைமையிலான காவல்துறையினர், இருவரையும் தனித்தனி அறைகளில் அமரவைத்து 1 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர். நட்சத்திர விடுதியில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகள், வாட்ஸ்அப் உரையாடல்கள் மற்றும் பணப் பரிவர்த்தனை ஆவணங்களை வைத்து இருவரிடமும் கேள்விகள் கேட்கப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க: தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல்… பொது சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
வாக்குமூலங்கள் வீடியோ பதிவு:
இருவரது வாக்குமூலங்களும் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இருவரும் அளிக்கும் தகவல்களில் முன்னுக்குப் பின் முரண்பாடுகள் இருக்கிறதா என்பதைச் சரிபார்த்து, தேவைப்பட்டால் இருவரையும் ஒரே இடத்தில் அமரவைத்து விசாரணை நடத்தவும் காவல்துறை திட்டமிட்டுள்ளது. அதேபோல், “விசாரணையின் போது துன்புறுத்தக் கூடாது, மருத்துவ வசதி அளிக்க வேண்டும்” எனச் செந்தில் பாலாஜி தரப்பில் ஏற்கனவே மனுக்கள் அளிக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற நிபந்தனைகளின்படி காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.