பழனி முருகன் கோயிலில் அதிரடி ஆய்வு.. அதிகாரிகளை லெப்ட் ரைட் வாங்கிய அமைச்சர் ரமேஷ்.. விழிபிதுங்கி நின்றனர்!
Palani Temple Minister Ramesh Inspected : பழனி தண்டாயுடபானி முருகன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இன்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பக்தர்களுக்கான அடிப்படை வசதியில் உள்ள குறைபாடுகள் குறித்து அதிகாரிகள், ஊழியர்களை கடிந்து கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இன்று திங்கள்கிழமை ( ஜூன் 8) அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பழனி – கொடைக்கானல் சாலையில் மலை கோவிலுக்கு செல்லும் பாதையில் ரூ.53 லட்சத்தில் கட்டப்பட்ட அலங்கார தோரண வாயிலை அமைச்சர் திறந்து வைத்தார். தொடர்ந்து, ராக்கால நந்தவனத்தை திறந்து வைத்தார். பின்னர், பெருந்திட்ட வளாகப் பகுதியில் அண்மையில் சுமார் 58 ஏக்கர் நிலம் கோவில் பணிகளுக்காக கையகப்படுத்தப்பட்டிருந்தது. இந்த இடத்தை அமைச்சர் ரமேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த பகுதியில், கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துவதற்கான இடம் மற்றும் வணிக வளாக கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த பணிகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார்.
பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி
பின்னர், பக்தர்கள் காத்திருப்போர் கூடத்திற்குள் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டதுடன் அங்கிருந்த பக்தர்களிடம் கோயில்களில் ஏதேனும் குறைகள் உள்ளனவா என்பது குறித்து கேட்டறிந்தார். அப்போது, மின் இழுவை ரயில் நிலையம் செல்வதற்கு வெகு நேரம் காத்திருக்க வேண்டி உள்ளதாக பக்தர்கள் புகார் தெரிவித்தனர். தொடர்ந்து, அந்த பகுதியில் உள்ள குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை ஆய்வு செய்த போது பக்தர்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்கவில்லை என்பதும், போதுமான கழிப்பறை வசதிகள் இல்லை என்பதும் அமைச்சர் கவனத்திற்கு தெரிய வந்தது.
மேலும் படிக்க: மின்வாரியத்தில் 300 பேருக்கு பதவி உயர்வு – தவெக அரசின் பித்தலாட்டம் – திமுக கடும் விமர்சனம்




அதிகாரிகள் – ஊழியர்களை கடிந்து கொண்ட அமைச்சர்
அப்போது, பக்தர்கள் இவ்வளவு நேரம் காத்திருந்தும் அவர்களுக்கான அடிப்படை வசதிகள் இல்லை என்றால் என்ன செய்வார்கள். இது தொடர்பாக கோவில் ஊழியர்கள் கவனிக்க மாட்டார்களா என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியதுடன், அதிகாரிகளை கடிந்து கொண்டார். மேலும், கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தரத்தையும், அதில் உள்ள உப்பின் அளவையும் நேரடியாக சோதனை செய்தார். மேலும், பழனி அடிவாரம் மின் இழுவை ரயில் நிலைய காத்திருப்பு கூடத்தில் தெரு நாய்கள் சுற்றி திரிந்தது.
அமைச்சரின் அடுக்கடுக்கான கேள்வியால் அதிகாரிகள் தவிப்பு
கட்டிட பொருட்கள் சிதறி கிடந்ததை பார்த்து கோபமடைந்த அமைச்சர் அதற்கு பொறுப்பான அதிகாரிகளின் பெயர்களை குறித்து வைத்துக் கொள்ளுமாறு தனது உதவியாளரிடம் தெரிவித்தார். இது போன்ற பல்வேறு குறைபாடுகள் குறித்து அமைச்சர் ரமேஷ் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். இதற்கு பதில் அளிக்க முடியாமல் அதிகாரிகள் விழி பிதுங்கி நின்றனர். மேலும், பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானத்தின் தரம் குறித்து அதனை சாப்பிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் படிக்க: செஞ்சுரி அடிக்கும் வெயில்.. கொட்டும் மழை ஒரு பக்கம்.. எங்கெல்லாம் மழை இருக்கும்?