சென்னையில் பெரும் அதிர்ச்சி.. 5-ஆவது மாடியில் இருந்து விழுந்த தள்ளுவண்டி.. நொடியில் பறிபோன உயிர்!
Chennai Crime : சென்னையில் தரமணி பகுதியில் அடுக்குமாடி கட்டட பணி நடைபெற்று வரும் பகுதியில் 5- ஆவது மாடியில் இருந்து தள்ளு வண்டி கீழே விழுந்ததில் குளித்துக் கொண்டிருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை மாவட்டம், தரமணி யில் அடுக்குமாடி கட்டிட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பகுதியில், கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி கட்டிடப் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த கட்டடத்தின் 5- ஆவது மாடியில் சிமெண்ட் மற்றும் கட்டுமான பொருட்கள் ஏற்றிச்செல்லும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக சிமெண்ட் உள்ளிட்ட பொருட்களை ஏற்றிச் செல்லும் வீல் பாரோ என்று அழைக்கப்படும் தள்ளுவண்டி கீழே விழுந்தது. இதில், தரைதளத்தில் வட மாநிலத்தை சேர்ந்த அஸ்ரபுல் ஆலம் ( 31 வயது) என்பவர் மீது அதிவேகமாக வந்து விழுந்தது. இதில், அவருக்கு தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் அங்கேயே மயங்கி விழுந்தார். இவரது அருகில் நின்று கொண்டிருந்த மற்றொரு தொழிலாளி மீதும் அந்த தள்ளுவண்டி விழுந்து காயமடைந்தார். இதை பார்த்த சக தொழிலாளிகள் அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தரமணி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை
அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அஸ்ரபுல் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மற்றொரு தொழிலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தரமணி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், இது தொடர்பாக சக தொழிலாளிகள் புகார் அளித்த நிலையில், அந்த புகாரின் அடிப்படையில், தரமணி போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க: கன்னத்தில் கை வைத்தது குற்றமா? எஸ்பிஐ வங்கி மேலாளருக்கு பளார்.. மு. க. அழகிரி மகள் மீது வழக்கு பதிவு!




கட்டுமான பணி இடத்தில் பாதுகாப்பு வசதிகள்
கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் இடத்தில் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் வலைகள் பொருத்தப்படாத காரணத்தால் இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாகவும், உயிரிழப்பு சம்பவம் ஏற்பட்டு இருப்பதாகவும் அங்கு பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்த அஸ்ரபுல் ஆலமின் குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அவரது சடலம் உடல் கூறாய்வு செய்வதற்காக அரசு மருத்துவமனை சவக்கடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த கோரிக்கை
சென்னையில் பல்வேறு இடங்களில் இது போன்ற அடுக்குமாடி கட்டட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளில் உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏற்படுத்தி தர வேண்டும் என்று தொழிலாளர்கள் தரப்பில் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
மேலும் படிக்க: தந்தை கண்முன்னே சோகம்.. திருவண்ணாமலை அருகே தனியார் பேருந்து மோதி விபத்து.. கல்லூரி மாணவி பரிதாப பலி!