“ரூ.30,000 கோடி செலவு”.. ஸ்மார்ட் மீட்டர் திட்டம் நிறுத்தம்?.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்!!
ஸ்மார்ட் மீட்டர்களில் 'மோடம்' மற்றும் 'சிம் கார்டு' தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன இத்திட்டத்தை முழுமையாக இம்ப்ளிமெண்ட் செய்யவே 6 முதல் 7 ஆண்டுகள் ஆகிவிடும். அப்படி இருக்கும்போது, குறைந்தது 20 ஆண்டுகளாவது இந்தத் தொழில்நுட்பம் நீடித்து உழைக்கும் என்ற உத்தரவாதம் இருந்தால் மட்டுமே இவ்வளவு பெரிய முதலீட்டைச் செய்ய முடியும்.
சென்னை, ஜுன் 08: தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ‘ஸ்மார்ட் மீட்டர்’ பொருத்தும் திட்டம் தொடர்பாக, இதுவரை எந்தவொரு இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்று மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் புதிய விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்தத் திட்டம் ஏன் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை மற்றும் இதில் உள்ள சவால்கள் என்னென்ன என்பது குறித்து அவர் பகிர்ந்துள்ளார். அதன்படி, மிகக் கடுமையான செலவினம் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தைச் செயல்படுத்துவதற்குத் தோராயமாக 30,000 கோடி ரூபாய் வரை மிக அதிக முதலீடு தேவைப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில், இவ்வளவு பெரிய செலவினத்தை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தால் தாங்க முடியுமா என்பது கேள்விக்குறிதான், இது மிகவும் கடினமானது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க : “பாஜகவின் ஒரே முகம் தாமரைதான்”.. அண்ணாமலை விவகாரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசம்!
தொழில்நுட்பக் குறைபாடுகள்:
ஸ்மார்ட் மீட்டர்களில் ‘மோடம்’ மற்றும் ‘சிம் கார்டு’ தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் தடையில்லா மொபைல் சிக்னல் கிடைப்பது சாத்தியமா என்பதை முதலில் ஆராய வேண்டும். தற்போதைய தொழில்நுட்பம் 5G-ஆக உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் தொழில்நுட்பம் மாறினால், இந்த சிம் கார்டுகளும் மோடம்களும் அதற்கு ஒத்துழைக்குமா என்ற சந்தேகம் உள்ளது. இத்திட்டத்தை முழுமையாக இம்ப்ளிமெண்ட் செய்யவே 6 முதல் 7 ஆண்டுகள் ஆகிவிடும். அப்படி இருக்கும்போது, குறைந்தது 20 ஆண்டுகளாவது இந்தத் தொழில்நுட்பம் நீடித்து உழைக்கும் என்ற உத்தரவாதம் இருந்தால் மட்டுமே இவ்வளவு பெரிய முதலீட்டைச் செய்ய முடியும். ஏற்கனவே சென்னை தி.நகர் பகுதியில் 1 லட்சத்திற்கும் அதிகமான ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் ஏற்படும் பிழைகளின் சதவீதங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
முதற்கட்டமாக அரசு கட்டிடங்கள்:
ஒன்றிய அரசு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மீட்டர்களில் ரீடிங் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளதுடன், முதற்கட்டமாக அரசு கட்டிடங்களில் ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்தக் கூறியுள்ளது. இதன்படி, தமிழகத்தில் உள்ள அரசு கட்டிடங்கள் மற்றும் அரசு சார்பு நிறுவனங்கள் எவை எவை என்ற கணக்கெடுப்புப் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன. 90-களில் பிஎஸ்என்எல் நிறுவனம் முறையான திட்டமிடல் இல்லாமல் கேபிள் பதிக்கும் பணிகளில் பெரிய அளவில் முதலீடு செய்து நஷ்டமடைந்தது போல, நாமும் அவசரமாக எந்த கொள்கை முடிவும் எடுத்துவிடக் கூடாது. பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இது எப்படிச் செயல்படுகிறது என்பதை முழுமையாக மதிப்பீடு செய்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும்.
இதையும் படிக்க : இனி கோவில்களில் சிறப்பு தரிசனத்திற்கு ஆன்லைனில் மட்டுமே அனுமதி – வெளியான அறிவிப்பு
ஆர்.எஸ்.பாரதிக்கு பதிலடி:
உள்ளாட்சித் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் இரண்டு மேயர் இடங்களுக்கு மேல் ஜெயித்தால், தனது மீசையை பாதியளவு எடுத்துவிடுவதாக” திமுக-வின் ஆர்.எஸ்.பாரதி பேசியிருந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர், “அவர்கள் தினமும் ஏதாவது பேச வேண்டும் என்பதற்காகப் பேசுகிறார்கள். தமிழக மக்கள் அரசிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை கவனித்து வருகிறார்கள். வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தமிழ்நாடு முழுவதும் மிகப் பெரிய வெற்றியைப் பெறும். அவர் மீசையை எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால், அதற்கொரு ரேசரை வைத்து எடுத்துவிட்டுப் போகட்டும், அதைப் பற்றி யாரும் கவலைப்படப் போவதில்லை” என்று பதிலடி கொடுத்தார்.