“பாஜகவின் ஒரே முகம் தாமரைதான்”.. அண்ணாமலை விவகாரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசம்!
பாஜகவுக்குள் குழப்பம் நிலவுவதாகக் கூறப்படும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், "பாஜக இவ்வளவு நிகழ்வுகளுக்குப் பிறகும் மிகவும் உறுதியாக இருக்கிறது. இதனைப் பொறுக்க முடியாமல், காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு போன்றவர்கள் ஏதேதோ கதைகளைக் கட்டி விடுகிறார்கள். இதைப் பற்றி நாங்கள் கவலைப்படப் போவதில்லை" என்று சாடினார்.
சென்னை, ஜுன் 07: தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அக்கட்சியில் இருந்து விலகி புதிய இயக்கத்தை தொடங்கியது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், “அண்ணாமலை சென்றதால் பாஜக பலவீனமாகிவிட்டதா?” என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அதிரடியாக பதிலடி கொடுத்துள்ளார். அவரது பேட்டியின் முக்கிய விவரங்கள் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.
இதையும் படிக்க: அண்ணாமலை விலகலால் பாஜக பலவீனமாகுமா? நயினார் நாகேந்திரன் நச் பதில்!
பாஜகவின் ஒரே முகம் தாமரைதான்:
பாஜகவுக்குத் தலைவர்களைத் தாண்டி கட்சி சித்தாந்தமே முக்கியம் என்று குறிப்பிட்ட தமிழிசை சௌந்தரராஜன், “பாரதிய ஜனதா கட்சியின் ஒரே முகம் தாமரை முகம் மட்டும்தான். வேறு முகங்களைக் காண்பித்து பாஜகவிற்கு மாற்று சக்தி தேட வேண்டிய கட்டாயம் எங்களுக்கு எப்போதும் இல்லை. இதில் நான் மிக மிக உறுதியாக இருக்கிறேன்” என்று தெளிவுபடுத்தினார். மேலும், இங்கிருந்து (பாஜகவில் இருந்து) வெளியேறிய நபருக்குப் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் எந்தவிதமான வாழ்த்தோ அல்லது ஆதரவோ கிடையாது என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
எதிர்க்கட்சிகளின் வதந்திகளுக்குப் பதில்:
பாஜகவுக்குள் குழப்பம் நிலவுவதாகக் கூறப்படும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், “பாஜக இவ்வளவு நிகழ்வுகளுக்குப் பிறகும் மிகவும் உறுதியாக இருக்கிறது. இதனைப் பொறுக்க முடியாமல், காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு போன்றவர்கள் ஏதேதோ கதைகளைக் கட்டி விடுகிறார்கள். இதைப் பற்றி நாங்கள் கவலைப்படப் போவதில்லை” என்று சாடினார்.
அண்ணாமலை வந்ததாலும் ஒன்றும் ஆகவில்லை:
சொந்தத் தொண்டர்களால் நேசிக்கப்பட்ட அண்ணாமலை கட்சியை கைவிட்டுப் போனதற்கான காரணம் என்ன?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த தமிழிசை, “காரணத்தை அவரிடம்தான் போய் கேட்க வேண்டும். சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் வந்ததால்தான் இந்த கட்சி பலமாக இருந்தது என்று. அண்ணாமலை வந்ததாலும் கட்சி பலமாகிவிடவில்லை, அவர் போனதாலும் கட்சி பலவீனமாகிவிடவில்லை. இந்த கட்சி எப்போதுமே பலமான ஒரு கட்சிதான். பாஜகவை உண்மையிலேயே நேசிக்கும் தொண்டர்கள் அனைவரும் இங்கேயேதான் இருக்கிறார்கள். அதற்கு நீங்கள் யாரும் சான்றிதழ் கொடுக்க வேண்டிய அவசியமில்லை” என்று காரசாரமாகப் பதிலளித்தார்.
இதையும் படிக்க: “தவெக-வுக்கு கொள்கை, கோட்பாடு என ஒரு கத்திரிக்காயும் கிடையாது!”.. சரமாரியாக விளாசிய முத்தரசன்!
உண்மையானவர்கள் கட்சி மாற மாட்டார்கள்:
பாஜகவின் முக்கியத் தலைவர்கள் யாரும் வெளியேறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய தமிழிசை சௌந்தரராஜன், “நேற்று நயினார் நாகேந்திரன் அவர்களே தான் கட்சியை விட்டுப் போகவில்லை என்று தெளிவாகக் கூறிவிட்டார். கட்சியில் உண்மையாக இருக்கக்கூடியவர்கள் எப்போதும் போக மாட்டார்கள். போனதற்குப் பிறகுதான் அவர்கள் உண்மையாக இல்லை என்பது தெரியவருகிறது. அப்படிப் போனவர்கள் மீண்டும் உண்மை உணர்ந்து திரும்பி வரட்டும்” என்று கூறினார்.