பயிற்சியில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே கட்சியில் பதவி.. அண்ணாமலையின் அதிரடி ரூல்ஸ்!!
அண்ணாமலையின் புதிய கட்சியில் பதவி பெற விரும்புபவர்கள் கட்டாயம் 'திறன் பயிற்சி' பெற்று, அதில் தேர்ச்சி பெற வேண்டும். இதற்காக, கோவையில் "ஏ.பி.ஜே அப்துல் கலாம் சென்டர் ஃபார் எத்திக்ஸ் அண்ட் பாலிடிக்ஸ்" (APJ Abdul Kalam Center for Ethics and Politics) என்ற புதிய பயிற்சி நிறுவனம் செயல்பட உள்ளது.
சென்னை, ஜுன் 06: பாரதிய ஜனதா கட்சியிலிருந்து (பாஜக) விலகி புதிய இயக்கம் தொடங்கியுள்ள அண்ணாமலை, தனது இயக்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் கட்சிப் பதவிகள் குறித்து யாரும் எதிர்பாராத அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். பாஜகவிலிருந்து விலகிய அண்ணாமலை, நேற்றைய தினம் புதிய இயக்கம் ஒன்றைத் தொடங்குவதாக அறிவித்தார். இந்த இயக்கம் தொடங்கப்பட்ட குறுகிய காலத்திலேயே, தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து சுமார் 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். இந்த இயக்கத்தை இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் முழுமையான அரசியல் கட்சியாக மாற்ற உள்ளதாக அண்ணாமலை தரப்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது. ‘மாற்றம்’ என்ற முக்கியமான குறிக்கோளுடன் அண்ணாமலை இந்த புதிய அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
இதையும் படிக்க: “ஒரு மேயரை ஜெயிச்சு காட்டுங்க பாப்போம்!”.. உதயநிதிக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஓபன் சவால்!
திறமைக்கு மட்டுமே பதவி:
புதிதாகத் தொடங்கப்படவிருக்கும் அரசியல் கட்சியில் பாரம்பரிய அரசியல் பாணியைப் பின்பற்றாமல், புதிய நிபந்தனை ஒன்றை அண்ணாமலை விதித்துள்ளார். அதன்படி, அண்ணாமலையின் புதிய கட்சியில் பதவி பெற விரும்புபவர்கள் கட்டாயம் ‘திறன் பயிற்சி’ பெற்று, அதில் தேர்ச்சி பெற வேண்டும். இதற்காக, கோவையில் “ஏ.பி.ஜே அப்துல் கலாம் சென்டர் ஃபார் எத்திக்ஸ் அண்ட் பாலிடிக்ஸ்” (APJ Abdul Kalam Center for Ethics and Politics) என்ற புதிய பயிற்சி நிறுவனம் செயல்பட உள்ளது.
யாரெல்லாம் பயிற்சி பெற வேண்டும்?:
கட்சியின் சாதாரண கிளைப் பொறுப்பாளர்கள் முதல் மாநில அளவிலான உயர் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் வரை அனைவரும் இந்த நிறுவனத்தில் பயிற்சி பெற வேண்டும். அண்ணாமலை அரசியலில் எதை நோக்கிச் செல்ல விரும்புகிறார், தமிழகத்தில் என்ன மாதிரியான மாற்றங்களைக் கொண்டு வர திட்டமிட்டுள்ளார் மற்றும் அவரோடு பயணிக்கும் நிர்வாகிகள் எந்தெந்த தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் என்பது குறித்து இந்தப் பயிற்சியில் விளக்கப்படும். இதில் கலந்து கொண்டு, தகுதியை நிரூபித்துத் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மட்டுமே புதிய கட்சியில் பதவிகள் வழங்கப்படும் என அண்ணாமலை இயக்கம் அதிரடியாக முடிவு செய்துள்ளது.
இதையும் படிக்க: “ரஜினிகாந்த் அழைப்பை மறுத்து மன்னிப்பு கேட்டேன்”.. ரகசியம் உடைத்த அண்ணாமலை!!
உள்ளாட்சித் தேர்தலே இலக்கு:
தமிழகத்தில் அடுத்து நடைபெறவிருக்கும் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அண்ணாமலையின் புதிய இயக்கம் அல்லது கட்சி போட்டியிடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, அடுத்த சில மாதங்களுக்குள் இயக்கத்தைக் கட்சியாக வலுப்படுத்தி, திறன் பயிற்சி மூலம் தகுதியான நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்து, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தங்களது வேட்பாளர்களைக் களம் இறக்க அண்ணாமலை திட்டமிட்டுள்ளார்.