காவிரி விவகாரம்.. தமிழக முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.. எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
Edappadi Palaniswami Regarding Cauvery Issue: காவிரி விவகாரம் மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி கருத்துக்களை கேட்க வேண்டும் என்று முதல்வர் விஜய்க்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
காவிரி நதிநீர் விவகாரம் மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி அவர்களின் கருத்துக்களை கேட்டு அதன் பின்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கர்நாடக மாநில அணைகளில் போதிய தண்ணீர் இருந்தும், அணை நிரம்பினால் தான் தமிழகத்துக்கு தண்ணீர் தருவோம் என்று கர்நாடக முதல்வர் கூறுவது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானதாகும். இதனை சட்டரீதியாகவும், தார்மீக அடிப்படையில் அழுத்தம் கொடுத்து தண்ணீரை பெற வேண்டிய தமிழக முதல்வர் தற்போது வரை வாய் மூடி மௌனமாக இருக்கிறார். தமிழகத்திலிருந்து யார் பேச்சுவார்த்தைக்கு வந்தாலும் எங்கள் நிலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்று கர்நாடகா முதல்வர் டி. கே. சிவகுமார் கூறியதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்
தமிழகத்தை பாலைவனமாக்கும், மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணைக்கட்டும் விவகாரம் குறித்து பெங்களூரு வரும் தமிழக முதல்வரிடம் பேசுவேன் என்று கர்நாடக முதல்வர் கூறியதாக செய்திகள் வந்துள்ளன. மேகதாது விவகாரம் குறித்து தமிழக முதல்வர் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி அவர்களது கருத்துக்களை கேட்க வேண்டும். டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து அவர்களுடைய கருத்துக்களையும் கேட்டு பின்னர், அவர்களின் கருத்துக்களின் அடிப்படையில் சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து பின்னரே உரிய முடிவை எடுத்து அறிவிக்க வேண்டும்.
மேலும் படிக்க: விஷப் பரீட்சையில் இறங்க வேண்டாம்.. முதல்வர் விஜய்யின் கர்நாடக பயணத்துக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!




காவிரி நீரை வழங்க மறுப்பது கண்டனத்துக்குரியதாகும்
எனவே, உடனடியாக தமிழக முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வலியுறுத்துகிறேன். ஏற்கனவே, காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளவாறு கர்நாடகா அரசு காவிரியில் நமக்கு வழங்க வேண்டிய உரிய பங்கு நீரை வழங்க மறுப்பது கண்டனத்துக்குரியதாகும். உச்சநீதிமன்றம் அளித்த இறுதி தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடக அரசு நடந்து கொள்ள வேண்டும்.
தமிழக முதல்வர்-கர்நாடக முதல்வர் பேச்சுவார்த்தை
காவிரியில் தமிழகத்திற்கான பங்கு நீரை பெற வேண்டும் என்று தமிழக வெற்றிக்கழகம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஆகஸ்ட் 3- ஆம் தேதி கர்நாடகம் செல்ல உள்ளார். அங்கு, அந்த மாநில முதல்வர் டி. கே. சிவக்குமாருடன், காவிரி, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: தமிழக சட்டப்பேரவையை சினிமா கொட்டகையாக மாறியுள்ளனர்.. முன்னாள் அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு!