ரூ. 50 லஞ்சம்.. தூக்கியடித்த எஸ்பி.. மயிலாடுதுறையில் லஞ்ச புகாரில் சிக்கிய காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்!
Mayiladuthurai Constable Transfer: மயிலாடுதுறையில் சோதனை சாவடியில் லாரி ஓட்டுநரிடம் கூகுள் பே வாயிலாக ஏட்டு ரூ. 50 லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்த நிலையில், அவரை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேகா பிரியா உத்தரவிட்டார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் மற்றும் சட்டவிரோத செயல்களை தடுப்பதற்காக திருவாரூர்- மயிலாடுதுறை மாவட்ட எல்லையில் பெரம்பூர் போலீஸ் சரகம் கழனிவாசல் பகுதியில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை சாவடியில் 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வழியாக செல்லும் வாகனங்கள் உள்ளிட்டவற்றில் போலீசார் சோதனை மேற்கொண்ட பின்னரே அனுப்பி வைத்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த சோதனை சாவடி வழியாக லாரி ஒன்று சென்றது. அந்த லாரியில் இருந்த அகர ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த மதன் மோகன் என்பவரிடம் கூகுள் பே மூலமாக போலீசார் ரூ.50 லஞ்சம் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அந்த லாரி அனுப்பி வைக்கப்பட்டது.
ரூ.50 லஞ்சம் பெற்ற ஏட்டு
இது தொடர்பாக, மதன் மோகன் பெரம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், சம்பவத்தன்று இரவு பெரம்பூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் ஏட்டு தெய்வ சிந்தாமணி பணியில் இருந்தது தெரியவந்தது. அவரிடம் காவல்துறையின் உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டது. இதனை ஏற்று தயவு சிந்தாமணியும் ஒத்துக் கொண்டார்.
மேலும் படிக்க: திருவள்ளூரில் மீண்டும் அமோனியா வாயு கசிவு.. இருவரின் நிலை என்ன? பெரும் பீதியில் பொதுமக்கள்!




ஏட்டை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்பி உத்தரவு
ஏற்கெனவே, இந்த விவகாரம் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேகா பிரியா கவனத்துக்கு சென்ற நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில், அந்த சம்பவம் குறித்து அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன் பேரில், தெய்வ சிந்தாமணியை ஆயுதப்படைக்கு பணியிடம் மாற்றம் செய்து உத்தரவிட்டார். மேலும், ஏட்டு தெய்வ சிந்தாமணி லஞ்சம் பெற்றபோது, அவருடன் பணியில் இருந்த ஊர்காவல் படை வீரரான கலியபெருமாள் என்பவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லஞ்சத்துக்கு எதிராக அரசு பல்வேறு நடவடிக்கை
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் பொதுமக்களிடம் லஞ்சம் பெறுவதை முற்றிலுமாக தடுக்கும் வகையில் அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில், பல்வேறு அலுவலகங்களில் லஞ்ச பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. மேலும், இது தொடர்பாக ஊழல் தடுப்பு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: சென்னையில் பெரும் அதிர்ச்சி.. 5-ஆவது மாடியில் இருந்து விழுந்த தள்ளுவண்டி.. நொடியில் பறிபோன உயிர்!