“தவெக-வுக்கு கொள்கை, கோட்பாடு என ஒரு கத்திரிக்காயும் கிடையாது!”.. சரமாரியாக விளாசிய முத்தரசன்!
கடந்த தேர்தலில் மொத்தமுள்ள இடங்களில் தவெக 107 உறுப்பினர்களுடன் வெற்றி பெற்று, சட்டமன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதனால் அவர்கள் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். வழக்கமாக ஆளுநர் அவர்களை ஆட்சி அமைக்க அழைத்து, குறிப்பிட்ட நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டிருக்க வேண்டும்.
புதுக்கோட்டை, ஜுன் 07: தமிழகத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் ஆதரவோடு தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்துள்ளது. இந்த புதிய ஆட்சியின் செயல்பாடு மற்றும் அக்கட்சியின் கொள்கைகள் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர் சந்திப்பில் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அதன்படி, தவெக-வின் ஆட்சி எப்படி இருக்கிறது, இந்த அரசு நீடிக்குமா என்று அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த முத்தரசன், “ஒரு குழந்தை இப்போதுதான் பிறந்திருக்கிறது. இன்னும் அந்தக் குழந்தைக்குத் தொப்புள் கொடி கூட அறுக்கப்படவில்லை. அதற்குள் இந்தத் தேருமா, தேராதா என்று இப்போதே எப்படி நாம் ஒரு முடிவுக்கு வர முடியும்? குழந்தை வளரட்டும், வளர்ந்த பிறகு அது தேருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்று எதார்த்தமாகத் தெரிவித்தார்.
இதையும் படிக்க : பயிற்சியில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே கட்சியில் பதவி.. அண்ணாமலையின் அதிரடி ரூல்ஸ்!!
கொள்கை, கோட்பாடு குறித்து விமர்சனம்:
த.வெ.க-வின் கொள்கைகளும் கோட்பாடுகளும் கம்யூனிச சித்தாந்தங்களோடு ஒத்துப்போகிறதா என்ற கேள்விக்கு முத்தரசன் மிகவும் காரசாரமாகப் பதிலளித்தார். “அவர்களுக்குக் கொள்கை, கோட்பாடு என ஒரு கத்திரிக்காயும் கிடையாது, ஒரு மண்ணங்கட்டியும் கிடையாது. அங்கு கொள்கை கோட்பாடு எல்லாம் ஒன்றும் இல்லை” என்று நேரடியாக விமரிசித்தார்.
கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளித்தது ஏன்?
கடந்த தேர்தலில் மொத்தமுள்ள இடங்களில் தவெக 107 உறுப்பினர்களுடன் வெற்றி பெற்று, சட்டமன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதனால் அவர்கள் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். வழக்கமாக ஆளுநர் அவர்களை ஆட்சி அமைக்க அழைத்து, குறிப்பிட்ட நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால் ஆளுநர் அதைச் செய்யாமல் தாமதப்படுத்தியதாக முத்தரசன் குற்றம் சாட்டினார்.
பாஜகவின் மறைமுக ஆட்சியைத் தடுக்கவே:
இதற்கான பின்னணி குறித்து அவர் விளக்கியதாவது, முன்பு சசிகலா முதலமைச்சராக உரிமை கோரிய போது, வேண்டுமென்றே காலத்தை கடத்தி, பின்னர் நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் அவரைச் சிறைக்கு அனுப்பிவிட்டு வேறு ஒரு ஆட்சியை அமைத்தார்கள். அதே பாணியை இப்போதும் கையாண்டு, தமிழ்நாட்டில் முறையான ஆட்சி அமையாமல் தடுத்து, அந்தச் சூழலைப் பயன்படுத்திப் பாரதிய ஜனதா கட்சி மறைமுகமாக ஆட்சியை நடத்தத் திட்டமிட்டது.
இதையும் படிக்க : அதிமுகவுக்கு அடுத்த ஷாக்.. தவெக-வில் ஐக்கியமான 4 முன்னாள் அமைச்சர்கள்.. அதிரும் தமிழக அரசியல்!
பாஜகவின் இந்த மறைமுக முயற்சி முறியடிக்கப்பட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சில தோழமைக் கட்சிகள் தவெக-வுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்தன. அதைத் தவிர இதில் வேறு எந்த உடன்பாடும் கிடையாது என்று முத்தரசன் தெளிவாக விளக்கினார்.