விநாயகர் சதுர்த்தி: 10 அடிக்கு மேல் சிலை வைக்கத் தடை.. சிசிடிவி கட்டாயம்.. சென்னையில் சிலை அமைக்க காவல்துறை கடும் கட்டுப்பாடுகள்..
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் விழா அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடைபெறக் காவல்துறை பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 10 அடிக்கு மேல் சிலை வைக்கக் கூடாது, சிசிடிவி கேமரா கட்டாயம், பட்டாசு வெடிக்கத் தடை உள்ளிட்ட முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. முழு விவரங்கள் இதோ.
சென்னை, செப்டம்பர் 09: விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் விழா கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தயாராகி வருகின்றன. பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவது, ஊர்வலமாகக் கொண்டு செல்வது மற்றும் கடலில் கரைப்பது போன்ற நிகழ்வுகள் மூலம் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளோ அல்லது பொதுமக்களுக்கு இடையூறுகளோ ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளக் காவல்துறை சார்பில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சென்னையில் விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியான மற்றும் பாதுகாப்பான முறையில் நடத்துவது குறித்து இந்து அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் காவல்துறை உயரதிகாரிகள் முக்கிய கலந்தாய்வுக் கூட்டத்தை நடத்தியுள்ளனர்.
இதையும் படிக்க: பிளஸ் 2 மாணவி கூட்டு வன்கொடுமை… ஒருவருக்கு மரண தண்டனை.. நெல்லை போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
விதிமுறைகளை அறிவித்த காவல்துறை:
சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் 29 இந்து அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 200 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் நிறுவுவது, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் ஊர்வலப் பாதைகள் குறித்தும், சிலைகளைக் கரைப்பதற்குப் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில், விழாக் அமைப்பாளர்கள் பின்பற்ற வேண்டிய பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளைச் சென்னை காவல்துறை முறைப்படி அறிவித்துள்ளது.
தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்:
காவல்துறை அறிவித்துள்ள முக்கிய விதிமுறைகளின்படி, சிலைகள் வைக்கப்படும் நிலத்தின் உரிமையாளர்கள், உள்ளாட்சி அமைப்புகள், தீயணைப்புத்துறை மற்றும் மின்சார வாரியம் ஆகிய அமைப்புகளிடம் விழா அமைப்பாளர்கள் கட்டாயம் முன்அனுமதி மற்றும் தடையில்லாச் சான்றிதழ்களைப் பெற வேண்டும். மேலும், அடிதளத்திலிருந்து சிலைகளின் உயரம் 10 அடிக்கு மேல் இருக்கக்கூடாது என்றும், சுற்றுச்சூழல் பாதிப்பைத் தவிர்க்கும் பொருட்டு இரசாயனம் கலக்காத, சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத பொருட்களால் செய்யப்பட்ட சிலைகளை மட்டுமே நிறுவ வேண்டும் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
பாதுகாப்புக்கு சிசிடிவி கேமரா கட்டாயம்:
சிலைகள் அமைக்கப்படும் இடங்களில் பாதுகாப்புப் பணிகளுக்காகக் கட்டாயம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். அதோடு மட்டுமல்லாமல், சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடச் சிலை அமைப்பாளர்கள் தரப்பிலிருந்து குறைந்தபட்சம் இரண்டு தன்னார்வலர்களைப் பாதுகாப்பில் வைத்திருக்க வேண்டும். மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற மத வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே சிலைகளை நிறுவுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் கண்டிப்புடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: புலி பட வருவாயை மறைத்த உத்தமர் ஜோசப் விஜய்… மிசாவை பற்றி பேச என்ன அருகதை உள்ளது… தயாநிதி மாறன் காட்டமான கேள்வி!
விளம்பர பேனர்கள் அமைக்க அனுமதி இல்லை:
மேலும், பிற மதத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலான முழக்கங்களை எழுப்பவோ, அரசியல் மற்றும் மத தலைவர்களின் விளம்பரப் பேனர்களை அமைக்கவோ அனுமதி இல்லை. சிலை வைக்கும் இடங்கள், ஊர்வலம் செல்லக்கூடிய பாதைகள் மற்றும் கரைக்கும் இடங்களில் பட்டாசுகள் வெடிக்க முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. காவல்துறை மூலம் அனுமதிக்கப்பட்ட வழிகள் மற்றும் வாகனங்களில் மட்டுமே சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்க வேண்டும் எனவும், விழா அமைப்பாளர்கள் இந்த நடைமுறைகளை எவ்வித மீறலுமின்றி முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் சென்னை காவல்துறை உத்தரவிட்டுள்ளது.