AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: தொடக்க விழா தேதி மாற்றம்? எப்போது தெரியுமா

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செப்டம்பர் 25ஆம் தேதி தொடங்கி வைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளதாகவும், உசிலம்பட்டி பகுதியில் தாய்மாமன் சீர் வழங்கும் பழக்கம் பிரபலமாக இருப்பதால், அங்கு திட்டத்தைத் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: தொடக்க விழா தேதி மாற்றம்? எப்போது தெரியுமா
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 09 Sep 2026 11:35 AM IST

செப்டம்பர் 9, 2026: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை செப்டம்பர் 15ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைக்க இருந்த நிலையில், அந்தத் திட்டம் தற்போது ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. செப்டம்பர் 15ஆம் தேதிக்குப் பதிலாக, செப்டம்பர் 25ஆம் தேதி மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தமிழ்நாடு முதலமைச்சர் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்:

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் அளவிலான தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. கடந்த ஜூன் 23ஆம் தேதி இந்தத் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்தார். இந்தத் திட்டத்தின் மூலம் ஜூன் 22ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு 22 கேரட் தங்க மோதிரம் தாய்மாமன் சீராக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. இன்று தொடங்கும் வேட்புமனு தாக்கல்..

இதற்காக பட்ஜெட்டில் அடுத்த ஓராண்டுக்கு ரூ.755 கோடியே 83 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், 4,41,667 தங்க மோதிரங்கள் தயாரிப்பதற்கான ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. தங்க மோதிரங்களைத் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தம் ஜாய் ஆலுக்காஸ் மற்றும் கல்யாண் ஜூவல்லர்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணம்:

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் முன்னதாக செப்டம்பர் 15ஆம் தேதி, அண்ணா பிறந்தநாளன்று தொடங்கி வைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், முதலமைச்சர் விஜய் நாளை லண்டன் பயணம் மேற்கொள்ள உள்ளதால், திட்டத்தின் தொடக்க விழா தள்ளிப்போவதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: விநாயகர் சதுர்த்தி: 10 அடிக்கு மேல் சிலை வைக்கத் தடை.. சிசிடிவி கட்டாயம்.. சென்னையில் சிலை அமைக்க காவல்துறை கடும் கட்டுப்பாடுகள்..

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் செல்லும் முதலமைச்சர் விஜய், சென்னையில் இருந்து துபாய் வழியாக லண்டன் செல்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், நடிகர் அஜித் குமாரின் கார் பந்தயத்தையும் நேரில் கண்டு களிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளை லண்டன் செல்லும் முதலமைச்சர் விஜய், செப்டம்பர் 16ஆம் தேதி மீண்டும் சென்னை திரும்புகிறார்.

செப்டம்பர் 25ஆம் தேதி உசிலம்பட்டியில் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதல்வர்:

இதனிடையே, செப்டம்பர் 17ஆம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி, அவர் படித்த பள்ளியில் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற உள்ளது. அதே நாளில் மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளதால், முதலில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் முதலமைச்சர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செப்டம்பர் 25ஆம் தேதி தொடங்கி வைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளதாகவும், உசிலம்பட்டி பகுதியில் தாய்மாமன் சீர் வழங்கும் பழக்கம் பிரபலமாக இருப்பதால், அங்கு திட்டத்தைத் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow Us