வீட்டிலேயே விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது எப்படி? முழு பூஜை வழிகாட்டி!
ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியில் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி நாளன்று, வீடுகளில் களிமண் அல்லது மஞ்சள் விநாயகர் சிலையை அமைத்து அருகம்புல் மற்றும் பூக்களால் அலங்கரிப்பர். விநாயகருக்குப் பிடித்த மோதகம், சுண்டல் மற்றும் பழங்களைப் படையலாக வைத்து, சாம்பிராணி மற்றும் கற்பூர தீபாராதனையுடன் மனதார வழிபடுவர்.
விநாயகர் சதுர்த்தி என்பது விநாயகப் பெருமானின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியில் கொண்டாடப்படும் ஒரு முக்கியப் பண்டிகையாகும். வீடுகளில் களிமண் அல்லது மஞ்சள் விநாயகர் சிலையை நிறுவி, பூக்கள் மற்றும் அருகம்புல்லால் அலங்கரித்து இப் பூஜையைத் தொடங்குவர். சுத்தமான மனையில் கோலமிட்டு, மாவிலை பரப்பி விநாயகர் சிலையை நடுவில் எழுந்தருளச் செய்வது முதல் படியாகும். சிலைக்குச் சந்தனம், குங்குமத் திலகமிட்டு எருக்கம்பூ மாலையால் அழகுபடுத்துவர். விநாயகருக்குப் பிடித்தமான மோதகம், சுண்டல், பொரி-கடலை மற்றும் பழங்களை நிவேதனமாகப் படைப்பார்கள். சாம்பிராணி, ஊதுபத்தி காட்டி கற்பூர தீபாராதனையுடன் விநாயகர் பாடல்களைப் பாடி மக்கள் மனதார வழிபடுவர். இறுதியாகத் தடைகள் நீங்கி நல்வாழ்வு பெற விநாயகரிடம் பிரார்தித்து பூஜையை நிறைவு செய்வார்கள்.
விநாயகர் சதுர்த்தி வழிபாடு முறை
விநாயகர் சதுர்த்தி என்பது இந்து சமயக் கடவுளான விநாயகப் பெருமானின் பிறந்தநாளைக் விமரிசையாகக் கொண்டாடும் ஒரு முக்கியப் பண்டிகையாகும். இது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி திதியில் (ஆகஸ்ட் – செப்டம்பர் மாதங்களில்) மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
பூஜைக்குத் தேவையான பொருட்கள்
மஞ்சள் விநாயகர் அல்லது களிமண் விநாயகர் சிலை
மனை (அடைப்பலகை) மற்றும் கோலம் போட அரிசி மாவு
மாவிலை, அருகம்புல், எருக்கம்பூ மாலை மற்றும் பிற மலர்கள்
வெற்றிலை, பாக்கு, பழங்கள் (வாழைப்பழம், கொய்யா போன்ற கிடைக்கக்கூடிய பழங்கள்)
தேங்காய், கற்பூரம், சாம்பிராணி, ஊதுபத்தி, சந்தனம் மற்றும் குங்குமம்
நிவேதனத்திற்கு: மோதகம் (கொழுக்கட்டை), சுண்டல், பொரி மற்றும் கடலை
எளிமையான பூஜை செய்முறை
1. பீடம் அமைத்தல்:
பூஜை அறையைச் சுத்தம் செய்து, ஒரு மனையின் மீது கோலமிட்டு, அதன் மேல் மாவிலை பரப்பவும். நாம் செய்து வைத்துள்ள மஞ்சள் விநாயகரை அந்த மனையின் மையத்தில் எழுந்தருளச் செய்ய வேண்டும்.
2. காப்பு மற்றும் அலங்காரம்:
விநாயகர் சிலைக்குச் சந்தனம், குங்குமம் திலகமிட்டு, அருகம்புல் மற்றும் எருக்கம்பூ மாலையால் அலங்கரிக்க வேண்டும். விநாயகரின் இருபுறமும் மாவிலைக் தோரணங்களை அமைக்கலாம்.
3. சங்கல்பம் மற்றும் ஆவாஹனம்:
கைகளில் சிறிது அட்சதை (அரிசியுடன் சந்தனம் கலந்தது) மற்றும் மலர்களை எடுத்துக்கொண்டு, விநாயகரை மனதார நினைத்து “எங்கள் வீட்டில் எழுந்தருளி அருள்புரிய வேண்டும்” என வேண்டி சிலைக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும்.
4. நிவேதனம் சமர்ப்பித்தல்:
தயார் செய்து வைத்துள்ள மோதகம், சுண்டல், பொரி-கடலை, வாழைப்பழங்கள் மற்றும் தேங்காயை விநாயகரின் முன் படையலாக வைக்க வேண்டும்.
5. தீபாராதனை மற்றும் நிறைவு:
சாம்பிராணி மற்றும் ஊதுபத்தி காட்டிய பிறகு, கற்பூர தீபாராதனை செய்ய வேண்டும். குடும்பத்தினருடன் இணைந்து விநாயகர் அகவல் அல்லது எளிய விநாயகர் பாடல்களைப் பாடி வழிபடலாம். பூஜை நிறைவடைந்ததும் விநாயகரிடம் நமது பிரார்த்தனைகளை மனதாரக் கூறி ஆசி பெற வேண்டும்.
பொறுப்புத்துறப்பு: இந்தக்கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி எழுதப்பட்டது. இது அறிவியல் பூர்வமாக நிரூபணம் ஆனது அல்ல.