ராஜ்யசபா இடைத்தேர்தல்.. வேட்பு மனு தாக்கல் நிறைவு.. போட்டியின்றி தேர்வாகிறார் பிரவீன் சக்கரவர்த்தி!
Rajya Sabha By Election Praveen Chakravarty : தமிழகத்தில் காலியாக உள்ள ராஜ்ய சபா எம். பி. இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வாக உள்ளார் .
தமிழகத்தில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சட்டமன்ற தேர்தலில் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால், மாநிலங்களவையில் தமிழகத்துக்கான ஒரு எம்பி பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு, எம்எல்ஏக்கள் பலம் அதிகம் உள்ள கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வது வழக்கமாகும். அதன்படி, கடந்த ஜூன் 1- ஆம் தேதி வேப்புமனு தாக்கல் தொடங்கியது. இன்று திங்கள்கிழமை ( ஜூன் 8) வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நிறைவடைந்தது. இதில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இவரை எதிர்த்து வேறு எந்த கட்சிகள் சார்பிலும் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யவில்லை. ஆனால், இரு சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
போட்டியின்றி தேர்வாகும் பிரவீன் சக்கரவர்த்தி
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரவின் சக்கரவர்த்தி ராஜ்யசபா இடைத்தேர்தலில் போட்டியின்றி தேர்வாக உள்ளார். இதனிடையே, நாளை செவ்வாய்க்கிழமை ( ஜூன் 9) வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற உள்ளது. ஜூலை 11- ஆம் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாளாகும். இதற்கான முடிவுகள் ஜூன் 18- ஆம் தேதி காலை 9 மணிக்கு வாக்கு பதிவு நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
மேலும் படிக்க: முதல்வர் விஜய்யுடன் செஸ் விளையாடிய பிரக்ஞானந்தா.. ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி கௌரவிப்பு!




13 மாநிலங்களில் 27 எம்.பி. பதவிகள் காலி
தமிழகம் உள்பட 13 மாநிலங்களில் காலியாக உள்ள சுமார் 27 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு தேர்வாவோர் குறித்த முடிவுகள் ஜூன் 18- ஆம் தேதி வெளியிடப்பட உள்ளன. மாநிலங்களவை உறுப்பினர் தாக்கல் செய்த வேட்பு மனுவை 10 எம்எல்ஏக்கள் முன்மொழிய வேண்டும். மேலும், 10 எம்எல்ஏக்கள் வழிமொழிய வேண்டும். அதன் அடிப்படையில், வேட்பாளர் வேட்பு மனு பரிசீலனையின் போது, ஏற்கப்படும். இல்லையெனில், அந்த வேட்பு மனு நிராகரிக்கப்படும்.
அதிக எம்எல்ஏக்கள் பலம் உள்ள கட்சி வேட்பாளர் தேர்வு
தற்போது, தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் அதிக அளவிலான எம்எல்ஏக்கள் உள்ளனர். இதை தவிர்த்து, திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் குறைந்த அளவிலான எம்எல்ஏக்கள் உள்ளனர். இதன் காரணமாக, எம்எல்ஏக்கள் அதிகம் உள்ள கட்சியான தவெக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளரே எம்பியாக தேர்வு செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: “திமுக தனித்து போட்டியிட வேண்டும்!”.. களஆய்வுக் குழுவிடம் தொண்டர்கள் அதிரடி வலியுறுத்தல்!!