AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்தில் கட்டுமானப் பொருட்கள் விலை கடும் உயர்வு.. அமைச்சரின் அதிரடியே காரணம்?

இந்த தட்டுப்பாட்டையும் விலையேற்றத்தையும் கட்டுப்படுத்த லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அரசுக்குச் சில முக்கிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. நீர்வளத்துறை மூலம் புதிய மணல் குவாரிகளைத் தொடங்கி, இயந்திரங்களைப் பயன்படுத்தாமல் உள்ளூர் மக்களைக் கொண்டு 'மேனுவலாக' மணல் அள்ளி டிராக்டர்களில் ஏற்ற வேண்டும். இதனால் விவசாயமும், நிலத்தடி நீரும் பாதிக்கப்படாது.

தமிழகத்தில் கட்டுமானப் பொருட்கள் விலை கடும் உயர்வு.. அமைச்சரின் அதிரடியே காரணம்?
மாதிரிப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 08 Jun 2026 10:18 AM IST

சென்னை, ஜுன் 08: தமிழ்நாட்டில் ஜல்லி, எம்-சாண்ட் (M-Sand) உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை அண்மைக்காலமாக மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. முன்பு ரூ.4,000-க்கு விற்கப்பட்ட ஒரு யூனிட் எம்-சாண்ட் தற்போது ரூ.4,500 முதல் பல இடங்களை பொறுத்து அதற்கு மேலாகவும் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. மூலப்பொருட்களின் இந்த விலையேற்றம் காரணமாக சிமெண்ட் விலையும் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்றவுடன், கனிமவளத்துறை அனுமதி மற்றும் தரக் கட்டுப்பாடு இல்லாமல் இயங்கி வந்த குவாரிகள் மற்றும் கிரஷர்கள் மீது புதிய அமைச்சர் அதிரடி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

இதையும் படிக்க: “ரூ.30,000 கோடி செலவு”.. ஸ்மார்ட் மீட்டர் திட்டம் நிறுத்தம்?.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்!!

120-க்கும் மேற்பட்ட குவாரிகள் மூடல்:

கடந்த சில நாட்களில் மட்டும் விதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்ட 120-க்கும் மேற்பட்ட குவாரிகள் மற்றும் கிரஷர்கள் மூடப்பட்டுள்ளன. அமைச்சரின் இந்த அதிரடி நடவடிக்கையால், பல கோடி ரூபாய் அபராதம் கட்ட நேரிடும் என்ற பயத்தில் அனுமதி இல்லாமல் இயங்கி வந்த பல கிரஷர்கள் தங்களது பணிகளைத் தாங்களாகவே தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர்.

சட்டவிரோத கிரஷர்கள் மூடப்பட்டதால், தற்போது முறையாக அனுமதி பெற்று இயங்கும் எஞ்சிய 60% குவாரிகளுக்கு அதிகப்படியான லாரிகள் வருகின்றன. இதனால் ஏற்பட்டுள்ள அதிக தேவையைக் கையாண்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை போன்ற பகுதிகளில் குவாரி உரிமையாளர்கள் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளனர்.

அதிரடி விலை உயர்வு விவரம்:

ஜல்லி: ஏற்கனவே ஒரு யூனிட் ரூ.3,300-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.500 உயர்ந்து ரூ.3,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

எம்.சாண்ட்: கட்டிடக் கட்டுமானத்திற்குப் பயன்படுத்தப்படும் ஒரு யூனிட் எம்.சாண்ட் ரூ.4,000-லிருந்து ரூ.500 உயர்ந்து, தற்போது ரூ.4,500- ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பி.சாண்ட்: சுவர் பூச்சுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் உயர்தர பி.சாண்ட் ஒரு யூனிட் ரூ.5,000-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.500 உயர்ந்து ரூ.5,500-க்கு விற்பனை ஆகிறது.

தமிழகத்தின் புவியியல் இருப்பிடம், குவாரிகள் அமைந்துள்ள தூரம் மற்றும் லாரி போக்குவரத்துச் செலவினங்களை அடிப்படையாகக் கொண்டு, அந்தந்த மாவட்டங்களுக்கு ஏற்ப இந்த விலையேற்றத்தின் அளவு சற்று மாறுதலுக்கு உட்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிர்ச்சியளிக்கும் புள்ளிவிவரங்கள்:

தமிழ்நாட்டில் மொத்தம் 4,000-க்கும் அதிகமான கிரஷர்கள் இயங்கி வரும் நிலையில், அதில் கனிமவளத்துறையின் அனுமதி பெற்றது வெறும் 1,367 மட்டுமே. அதிலும் பொதுப்பணித்துறையின் தரக் கட்டுப்பாட்டு ஒப்புதல் பெற்றது வெறும் 476 கிரஷர்கள் மட்டும்தான் என்ற புள்ளிவிவரத்தை அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக எம்-சாண்ட் தயாரிப்பிற்கு முறையான சட்டதிட்டங்களோ, தரக் கட்டுப்பாட்டு விதிகளோ இல்லாததே அரசு கட்டிடங்கள் மற்றும் போலீஸ் குவார்ட்டர்ஸ் போன்ற கட்டுமானங்களில் தரம் குறைவதற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.

அரசுக்கு வைக்கப்பட்ட கோரிக்கைகள்:

இந்த தட்டுப்பாட்டையும் விலையேற்றத்தையும் கட்டுப்படுத்த லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அரசுக்குச் சில முக்கிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. நீர்வளத்துறை மூலம் புதிய மணல் குவாரிகளைத் தொடங்கி, இயந்திரங்களைப் பயன்படுத்தாமல் உள்ளூர் மக்களைக் கொண்டு ‘மேனுவலாக’ மணல் அள்ளி டிராக்டர்களில் ஏற்ற வேண்டும். இதனால் விவசாயமும், நிலத்தடி நீரும் பாதிக்கப்படாது.

கடந்த 50 ஆண்டுகளாக அணைகளில் தேங்கியுள்ள மண்ணை அள்ளி வெளிநாடுகளைப் போலப் பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் அரசு வழங்க வேண்டும். பாலாறு, கொசஸ்தலையாறு போன்றவற்றில் மணல் தீர்ந்துவிட்டதால், சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களின் தேவையைப் பூர்த்தி செய்ய ஆந்திராவில் இருந்து அரசே நேரடியாக மணல் பெற்றுத் தர வேண்டும். அல்லது தூத்துக்குடி, சென்னை துறைமுகங்கள் வழியாக மலேசியா மணலைத் தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் இறக்குமதி செய்ய வேண்டும்.

கனிமம் கடத்தப்படுவதையும், லாரிகளில் ஓவர்லோடு ஏற்றப்படுவதையும் தடுக்க கடந்த 2025 ஜனவரியில் கொண்டு வரப்பட்டு உடனே நிறுத்தப்பட்ட ‘ஈ-வே பில்’ மற்றும் ‘ஈ-வே பர்மிட்’ திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இதையும் படிக்க : இனி கோவில்களில் சிறப்பு தரிசனத்திற்கு ஆன்லைனில் மட்டுமே அனுமதி – வெளியான அறிவிப்பு

அடுத்தகட்ட நடவடிக்கை:

கட்டுமானப் பொருட்களின் இந்தத் தற்காலிக விலையேற்றம் மற்றும் தட்டுப்பாடு குறித்து ஆலோசிக்க, வருகிற வியாழக்கிழமை தலைமைச் செயலகத்தில் அனைத்து குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்களின் ஆலோசனைக் கூட்டத்திற்கு அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். இக்கூட்டத்திற்குப் பிறகு இந்த விலையேற்றம் கட்டுக்குள் வரும் என்று லாரி உரிமையாளர்கள் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Follow Us