திமுகவில் அதிரடி மாற்றம்.. மா.செக்கள் அதிகாரம் அதிரடியாக குறைப்பு? விரைவில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
DMK District Secretaries: தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வி அடைந்த நிலையில், கட்சியில் உள்ள மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், அவர்களுக்கான சட்டமன்ற தொகுதிகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் பெரும் தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியில் இருந்து மீள்வதற்காக திமுக தலைமை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது திமுகவின் உள் கட்டமைப்பில் பெரும் மாற்றத்தை கொண்டு வருவதற்கு கட்சி தலைமை தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில், திமுகவின் தோல்வி குறித்து கட்சியின் கள ஆய்வு குழு மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு மாவட்ட செயலாளர்களின் செயல்பாடுகள் தொடர்பாக தொண்டர்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகிகள் மத்தியில் இருந்து அதிகமான புகார்கள் எழுந்துள்ளன. இதில், குறிப்பாக மாவட்ட செயலாளர்களின் அணுகுமுறை மற்றும் தேர்தல் பணிகளில் ஏற்பட்ட தொய்வு குறித்து தலைமைக்கு வழங்கப்பட்ட அறிக்கைகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
மாவட்ட செயலாளர்களின் அதிகாரம் குறைப்பு
இதன் காரணமாக தற்போது நடைமுறையில் ஒரு மாவட்ட செயலாளரின் கீழ் 2 முதல் 6 சட்டமன்ற தொகுதிகள் வரை உள்ளன. இதனால், கட்சியின் அறிவுறுத்தல்கள் கடைகோடி தொண்டனை சென்றடைவதில் சிக்கல் ஏற்படுவதாகவும், நிர்வாக திறன் பாதிக்கப்படுவதாகவும் தலைமை கருதுகிறது. எனவே, மாவட்ட செயலாளர்களின் அதிகார வரம்பை குறைக்கும் வகையில், ஒரு, மாவட்ட செயலாளரின் கீழ் 2 முதல் 4 தொகுதிகள் மட்டுமே இருக்கும் வரையில் மறு சீரமைப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: “ரூ.30,000 கோடி செலவு”.. ஸ்மார்ட் மீட்டர் திட்டம் நிறுத்தம்?.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்!!
மா.செக்களின் எண்ணிக்கை 100-க்கும் மேல் அதிகரிக்க இலக்கு
அதன்படி, தற்போது உள்ள 78 மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை 100- க்கும் மேலாக உயர்த்த திமுக தலைமை திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் கட்சியின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தவும், அடிமட்ட தொண்டர்களின் குரலுக்கு முக்கியத்துவம் அளிக்கவும் வழிவகை செய்யப்பட்ட உள்ளது. இதில், புதிய மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்யும் போது கட்சியில் அதிக காலம் உழைத்த மூத்த நிர்வாகிகள், திறமை மிகுந்த இளைஞர்கள், பெண்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்க ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
ஏற்கெனவே, இருந்து வரும் மாவட்ட செயலாளர்களின் செயல்பாடுகள் திருப்தி அளிக்காத பட்சத்தில், அவர்களுக்கு பதிலாக புதிய மற்றும் சுறுசுறுப்பான நிர்வாகிகளை, மாவட்ட செயலாளராக நியமிக்க திமுக தலைமை முடிவெடுத்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கைகள் கட்சியின் எதிர்காலத்தில் நடைபெறும் தேர்தல்களை எதிர்கொள்வதற்கும், நிர்வாகத்தை சீரமைப்பதற்கும் முக்கிய படிக்கல்லாக அமையும் என்று பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு திமுக தலைமையிடம் இருந்து விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை.. நாளை தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்..

