தொகுதி மறுசீரமைப்பு.. முதல்வர் விஜய் தலைமையில் எம்பிக்கள் கூட்டம் தொடக்கம்! திமுக- அதிமுக புறக்கணிப்பு!
Tamilnadu MPs Meeting : மக்களவை தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் தமிழக எம். பி. க்கள் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தை திமுக மற்றும் அதிமுக எம்பிக்கள் புறக்கணித்த நிலையில், பிற கட்சிகளை சேர்ந்த 20 எம்பிக்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியாவில் மக்களவைத் தொகுதி மறு சீரமைப்பு மசோதாவை நிறைவேற்றுவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. இந்த மசோதாவால் தமிழகத்தில் என்ன தாக்கம் ஏற்படும் என்பது தொடர்பாக விரிவான ஆலோசனை மேற்கொள்வதற்காக தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தை நடத்துவதற்காக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு தமிழக முதல்வர் அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று சனிக்கிழமை ( ஆகஸ்ட் 8- ஆம் தேதி) எம்பிகள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ப. சிதம்பரம், சசிகாந்த் தாஸ், ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன், கட்சியின் துணை பொது செயலாளரும், எம்பியுமான துரை.ரவிக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எம். பி. சு. வெங்கடேசன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மை செயலாளரும், எம்பியுமான துரை வைகோ, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் எம்பி. நவாஸ் கனி உள்ளிட்ட 20 எம்பிக்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
கூட்டத்தை புறக்கணித்த திமுக- அதிமுக கூட்டணி கட்சிகள்
இந்த கூட்டத்தை திராவிட முன்னேற்ற கழகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, மக்கள் நீதி மய்யம், தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஆகிய கட்சிகளை சேர்ந்த சுமார் 37 எம்.பி.க்கள் புறக்கணித்துள்ளனர். தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு 30 எம்பிக்கள், அதிமுகவுக்கு 4 எம்பிக்கள் பாட்டாளி மக்கள் கட்சி, மக்கள் நீதி மய்யம், தேமுதிக ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு எம்பிக்கள் என மொத்தம் 37 எம்பிக்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
மேலும் படிக்க: தொகுதி மறுவரையறை மசோதா.. முதல்வர் விஜய் தலைமையிலான எம்.பிக்கள் கூட்டத்தை புறக்கணிக்க அதிமுக திமுக முடிவு..




முதல் அமைச்சர் ஜோசப் விஜய் தீவிர ஆலோசனை
இதில், நாடாளுமன்ற மக்களவையில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு 22 எம்பிக்களும் மாநிலங்களவையில் 8 எம்பிக்களும் உள்ளனர். இவர்களை தவிற தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் மற்றும் நிர்மல் குமார் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். இவர்களிடம் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
கடைசி நேரத்தில் கூட்டத்தை புறக்கணித்த காங்கிரஸ் எம்.பி
திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த கூட்டத்தை அரசியல் காய் நகர்த்தல் என்று விமர்சித்ததுடன் கூட்டத்தை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு எம்.பி. மட்டும் கடைசி நேரத்தில் கூட்டத்தை புறக்கணித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க: “தமிழக நலனா? அரசியலா?”.. எம்பிக்கள் கூட்டத்தைப் புறக்கணிக்கும் கட்சிகளை சாடிய மாணிக்கம் தாகூர்!!