அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அவதூறு வழக்கு… நீதிமன்றத்தில் மு.க. ஸ்டாலின் கொடுத்த பதிலடி.. முழு விவரம்!
M. K. Stalin File Counter Affidavit : ஜான் பிரிட்டோவுடன் தொடர்பு படுத்தி பேசியதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தொடர்ந்த அவதூறு வழக்கில் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு.க. ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார் .
தமிழகத்தில் போதை பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஜான் பிரிட்டோவுக்கும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கும் தொடர்பு இருப்பதாக திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதில், அமலாக்கத்துறையின் அறிக்கையை குறிப்பிட்டு ரூ. 258 கோடி மதிப்பிலான போதை பொருள் கடத்தல் வழக்கில் மூளையாக செயல்பட்ட ஜான் பிரிட்டோ என்பவர் ஆதவ் அர்ஜுனாவின் உறவினர் என்ற உண்மை வெளியாகி இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு எதிராக, ஆதவ் அர்ஜுனா, ஜான் பிரிட்டோ தனது உறவினர் அல்ல எனவும், ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்குமாறு மு.க. ஸ்டாலினுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மு.க. ஸ்டாலின், திமுக ஐ.டி. விங் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
சிபிஐ விசாரணையை எதிர்கொண்டு வரும் ஆதவ் அர்ஜூனா
அதன்படி, இன்று செவ்வாய்க்கிழமை நீதிபதி கோவிந்தராஜன், திலகவதி முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மு. க. ஸ்டாலின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ஆதவ் அர்ஜுனாவின் மாமனார், மாமியார், அவரின் சகோதரர் ஆகியோருக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதில், கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணையை ஆதவ் அர்ஜுனா எதிர்கொண்டு வருகிறார். இதனை, வில்லிவாக்கம் தொகுதியில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் குறிப்பிட்டார். இதனை மறைத்து அவர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
மேலும் படிக்க: காலை உணவுத் திட்டத்தை துவக்கம் – மாணவர்களுடன் உணவருந்திய முதல்வர் விஜய்




தூய்மையான கரங்களால் ஆதவ் வழக்கு தொடுக்கவில்லை
மொத்தத்தில் தூய்மையான கரங்களால் ஆதவ் அர்ஜுனா நீதிமன்றத்தை அணுகவில்லை. எனவே, அவருக்கு எந்தவிதமான நிவாரணமும் கோர உரிமை கிடையாது. போதைப் பொருள்கள் கடத்தல் தொடர்பாகவோ, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் உறவினர் ஜான் பிரிட்டோபை தொடர்பு படுத்தியோ சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிடும்படி திமுக ஐடி விங்குக்கு அறிவுறுத்தல் வழங்கவில்லை. கட்சியின் பல்வேறு பிரிவுகள் சோசியல் மீடியாவில் வெளியிடும் பதிவுகளுக்கு தலைவர் என்ற முறையில் தன்னை பொறுப்பாக்க முடியாது.
ஆதவ் அர்ஜூனா மனுவில் மறுப்பு தெரிவிக்கவில்லை
ஐடி விங் அணியின் உறுப்பினர்களின் தனிப்பட்ட செயல்களுக்கு தன்னை சட்டரீதியாக பொறுப்பாக்க முடியாது. ஜான் பிரிட்டோ என்ற பெயரில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறவினர் இருக்கிறார் என்பதையோ, அவர் மீது அமலாக்கத்துறை வழக்கு இருப்பதையோ, ஆதவ் அர்ஜுனா தனது மனுவில் மறுப்பு தெரிவிக்கவில்லை. உள்நோக்கத்தோடு பதிவிட்டதாக அவர் கூறும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை. எனவே, இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மதுரைக்கு மாறிய ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்ட தொடக்க விழா – என்ன காரணம்?