மதுரைக்கு மாறிய ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்ட தொடக்க விழா – என்ன காரணம்?
Gold Ring Scheme Venue Shifted : அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின் தொடக்க விழா நடைபெறும் இடம் உசிலம்பட்டியில் இருந்து மதுரைக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை, செப்டம்பர் 22 : அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின் தொடக்க விழா நடைபெறும் இடம் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் செப்டம்பர் 28, 2026 அன்று இந்தத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான முன்னேற்பாடுகளும் அங்கு மேற்கொள்ளப்பட்டு வந்தன.
மதுரைக்கு மாறிய ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்ட தொடக்க விழா
இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக தொடக்க விழா உசிலம்பட்டியில் இருந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் இதற்கான முன்னேற்பாட்டு பணிகளும் தொடங்கியுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு சுகாதார நிலையங்களில் பிறக்கும் தகுதியான குழந்தைகளுக்கு ஒரு கிராம் எடை கொண்ட தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டம் கடந்த ஜூன் 22ஆம் தேதி மற்றும் அதற்குப் பிறகு பிறந்த தகுதியான குழந்தைகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : சென்னையில் ஸ்டார்பக்ஸ் உலகளாவிய திறன் மையம் – 800 பேருக்கு வேலை வாய்ப்பு – முதல்வர் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம்




மேலும் வருகிற செப்டம்பர் 28, 2026 அன்று நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்கட்டமாக சில குழந்தைகளுக்கு முதல்வர் விஜய் நேரடியாக தங்க மோதிரம் வழங்குவார் என்றும், அதன்பின்னர் திட்டத்தின் கீழ் தகுதி பெறும் குழந்தைகளுக்கு மோதிரங்கள் வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி கடந்த ஜூன் 22, 2026 முதல் செப்டம்பர் 28, 2026 வரை அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, 107 மையங்கள் மூலம் செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் தினமும் 100 குழந்தைகள் வீதம் தங்க மோதிரம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 28, 2026 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும் நேரத்தில் தங்க மோதிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தங்க மோதிரத்துக்கும் தனித்துவமான வரிசை எண் வழங்கப்படுவதுடன், சேதப்படுத்த முடியாத பாதுகாப்பு பெட்டகத்தில் மோதிரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திட்டத்தின் முதல் கட்டமாக 1 லட்சத்து 28 ஆயிரம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : காலை உணவுத் திட்ட விரிவாக்கம்.. முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்!
முன்னதாக, இந்த திட்டம் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு கடந்த செப்டம்பர் 15, 2026 அன்று தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் காரணமாக தொடக்க தேதி மாற்றப்பட்டு, செப்டம்பர் 28, 2026 அன்று தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், திட்டத்தை மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் தொடங்கி வைப்பார் என தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.