பெரியார் அறிவுலக போலி நூல்கள் விவகாரம் – 8 கேள்விகளுடன் லஞ்ச ஒழிப்புத்துறையில் திமுக புகார்
DMK Files Complaint with Anti Corruption Bureau : கோவை பெரியார் அறிவுலகத்தில் புத்தக கொள்முதல் நடைபெற்றதில் ஊழல் குறித்து விசாரிக்க திமுக சார்பில் அக்கட்சியின் சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநருக்கு புகார் மனு அளித்துள்ளார். அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
சென்னை, நவம்பர் 7 : கோவையில் அண்மையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தில் போலியான நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும் போலியான பதிப்பகங்கள் பெயரில் நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதாகவும் அவர் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார். அதன் பிறகே இந்த விவகாரம் தமிழக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஆளும் கட்சியான தவெகவும், எதிர்கட்சியான திமுகவும் (DMK) மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.
லஞ்ச ஒழிப்புத்துறையில் திமுக புகார்
இந்த நிலையில் கோவை பெரியார் அறிவுலகத்தில் புத்தக கொள்முதல் நடைபெற்றதில் ஊழல் குறித்து விசாரிக்க திமுக சார்பில் அக்கட்சியின் சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநருக்கு புகார் மனு அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் விசாரித்து உண்மைகளை கண்டறிய கோரப்பட்டுள்ளது. மேலும் அந்த மனுவில் 8 முக்கிய கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு ரூ.45,000 வரை ஊக்கத்தொகை – தமிழக அரசு அறிவிப்பு




லஞ்ச ஒழிப்புத்துறையில் திமுக அளித்த மனுவில் இடம்பெற்ற 8 கேள்விகள்
1. இந்த புத்தகங்களுக்கான கொள்முதல் மற்றும் வாங்குதல் ஆர்டர்களை வழங்கிய அதிகாரிகள் யார்?
2. புத்தகங்கள் ஒவ்வொன்றாக மதிப்பீடு செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு வாங்கப்பட்டதா அல்லது மொத்தமாக வாங்கப்பட்டதா?
3. இந்த பதிப்பகங்களுக்கு கொள்முதல் ஆர்டர்கள் எந்த தேதிகளில் வழங்கப்பட்டன?
4. கொள்முதலுக்கான குறிப்பு கோப்பை தொடங்கிய, கையெழுத்திட்ட மற்றும் ஒப்புதல் அளித்த அதிகாரிகள் யார்?
5. இந்த கொள்முதலுக்கு தகுதிவாய்ந்த புத்தகத் தேர்வு ஒப்புதல் அளித்ததா, மேலும் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறை பின்பற்றப்பட்டதா?
6. த்ரிஷா விஜய், சங்கீதா விஜய், தாமரை பன்னீர், தாமரை முரளி, மோனிகா ரவி ஆர். மற்றும் பிற பெயர்களைக் கொண்ட எழுத்தாளர்கள் உண்மையில் இருக்கிறார்களா?
7. புத்தகங்கள் எந்த தேதிகளில் விநியோகிக்கப்பட்டன, அவை பெறப்பட்டவுடன் அவற்றின் தரம் மற்றும் அளவு சரிபார்க்கப்பட்டதா?
8. ஒவ்வொரு பதிப்பகத்திற்கும் எந்த தேதிகளில், எவ்வளவு தொகை வழங்கப்பட்டது?
ஆகிய கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. முன்னதாக இந்த விவகாரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், திருச்சி காமராஜர் அறிவுலகத்திற்கும் ஏ.ஐ. புத்தகங்களை வாங்க திமுக ஆட்சியில் கொள்முதல் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் ஏஐ ஊழலை செய்துள்ளது திமுக. பிப்ரவரி 14, 2026 அன்று புத்தகம் கொள்முதலுக்கு ஆணை அளிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 7 நாட்களில் விநியோகிக்க வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : தீபாவளி சர்ப்ரைஸ்.. அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.75,000 வரை பயிர்கடன் தள்ளுபடி.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!!
சர்ச்சைக்குரிய நூல்கள் அகற்றம்
இதற்கிடையே கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் அறிவுலகத்தில் சர்ச்சைக்குரிய நூல்கள் அகற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெரியார் அறிவுலகத்தின் 4ஆவது மாடியில் இருந்த அகல்விளக்கு பதிப்பக நூல்கள் அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோவை பெரியார் அறிவுலகம் மட்டுமல்லாமல் சென்னை கன்னிமாரா நூலகத்திலும் போலியான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.