புயல் எச்சரிக்கையை மீறி கடலுக்குச் சென்றதே மீனவர்கள் மரணத்துக்கு காரணம் – கடலோர காவல் படை அறிக்கையால் சர்ச்சை
Kasimedu Fishermen Death : சென்னை காசிமேடு மீன்பிடி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மாயமான சம்பவத்தில் புயல் எச்சரிக்கையை மீறி மீனவர்கள் கடலுக்குச் சென்றதே அவர்களது மரணத்துக்கு காரணம் என இந்திய கடலோர காவல் படை தெரிவித்துள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நவம்பர் 7 : சென்னை காசிமேடு மீன்பிடி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மாயமான சம்பவத்தில் ஆந்திர மாநிலம் கோத்தப்பட்டினம் மற்றும் பள்ளிபாலம் கடற்கரை பகுதியில் இருந்து 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. மேலும் 2 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், புயல் எச்சரிக்கையை மீறி மீனவர்கள் கடலுக்கு சென்றதே இந்த சம்பவத்துக்கு காரணம் என இந்திய கடலோர காவல் படை (Indian Coast Guard) தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மீனவர்கள் மரணம் – புயல் எச்சரிக்கையை மீறி கடலுக்குச் சென்றதே காரணம்
சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 9 மீனவர்கள் கடந்த அக்டோபர் 29, 2026 அன்று, விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது திடீரென புயல் ஏற்பட பாதுகாப்பு காரணங்களுக்காக ஆந்திர மாநிலம் நிஜாம்பட்டினம் துறைமுகத்தில் படகை நிறுத்தியுள்ளனர். புயல் கரையைக் கடந்த பிறகு மீன்பிடிக்க சென்ற நிலையில் நடுக்கடலில் விசைப்படகின் என்ஜின் பழுதடைந்தததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கடந்த, நவம்பர் 3 அன்று அதிகாலை 3.30 மணியளவில் வயர்லெஸ் கருவி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க : தீபாவளி சர்ப்ரைஸ்.. அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.75,000 வரை பயிர்கடன் தள்ளுபடி.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!!




அதன் பிறகு அவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் இருந்துள்ளது. இதனையடுத்து, மீனவர்களைத் தேடும் பணியில் ஹெலிகாப்டர்கள் மற்றும் கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டன. இந்நிலையில் தான் ஆந்திர மாநிலம் கோத்தப்பட்டினம்மற்றும் பள்ளிபாலம் கடற்கரைப் பகுதிகளில் 7 பேரின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீதமுள்ள 2 பேர் இதுவரை கிடைக்காத நிலையில், தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், புயல் எச்சரிக்கையை மீறி கடலுக்குச் சென்றதாலேயே இந்த சம்பவத்துக்கு காரணம் என கடலோர காவல் படை தெரிவித்திருக்கிறது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக இந்திய கடலோரக் காவல்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், அர்னாப் மற்றும் முரசு ஆகிய இரண்டு புயல்களும் ஒரு வார இடைவெளியில் ஆந்திரப் பிரதேசக் கடற்கரையை கடந்தது. இதனையடுத்து மாநில மீன்வளத்துறை மற்றும் தொடர்புடைய பிற துறைகளுடன் இணைந்து, மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என பல்வேறு வானிலை முன்னெச்சரிக்கைகள் மற்றும் எச்சரிக்கைகளை இந்திய கடலோரக் காவல்படை வெளியிட்டிருந்தது.
மாநில அதிகாரிகளிடமிருந்து கிடைத்த தகவலின்படி, 9 மீனவர்களுடன் மீன்பிடிப் படகு, கடந்த அக்டோபர் 29, 2026 அன்று அர்னாப் புயல் கரையைக் கடந்த பிறகு சென்னை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்றுள்ளது. முரசு புயல் தொடர்பாக வெளியிடப்பட்ட எச்சரிக்கையைத் தொடர்ந்து, நெல்லூருக்கும் நரசாபுரத்துக்கும் இடையே 2026 நவம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் புயல் கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டிருந்ததால், அந்தப் படகு நிஜாம்பட்டினத்தில் பாதுகாப்பிற்காகத் தஞ்சமடைந்துள்ளது.
இதையும் படிக்க : தென்காசி அருகே பெண் எரித்து கொலை.. கணவன், தாய், கொழுந்தன் கைது.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
கடந்த நவம்பர் 2, 2026 அன்று இரவு முரசு புயல் கரையைக் கடந்து கொண்டிருந்த உச்சகட்டப் புயல் பாதிப்பின் போது, அந்தப் படகு நிஜாம்பட்டினத்திலிருந்து மீண்டும் கடலுக்குச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் கடலில் மிக மோசமான வானிலை மற்றும் கடல் சீற்றம் நிலவியுள்ளன. புயலின் மையப்பகுதி கடக்கும் நேரத்தில் காற்றின் வேகம் தற்காலிகமாகக் குறைந்திருக்கக்கூடும். இதனைப் புயல் முழுமையாகக் கடந்துவிட்டதாக மீனவர்கள் தவறாகக் கருதியிருக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது. ஆனால், புயலின் பின்பகுதி அப்போது கடக்க வேண்டியிருந்தது.
புயல் காலங்களில் நடைமுறையில் உள்ள வானிலை எச்சரிக்கைகளைப் புறக்கணித்துக் கடலுக்குச் செல்வதால் ஏற்படும் மிகப்பெரிய ஆபத்துகளை இந்தச் சம்பவம் மீண்டும் எடுத்துக்காட்டுகிறது. இதனையடுத்து எதிர்காலத்தில் மீனவர்கள மாநில அரசு மற்றும் இந்தியக் கடலோரக் காவல்படை வெளியிடும் வானிலை எச்சரிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்களை கடைபிடிக்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.