தவெக எம்எல்ஏவிடம் ரூ. 30 கோடி குதிரை பேரம்.. 2- ஆவது நாளாக பி.எம்.மன்னனிடம் விசாரணை!
CCB Police Question P.M. Mannan : தவெக எம்எல்ஏ முஸ்தபாவிடம் குதிரை பேரம் பேசிய புகாரில் அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் பி. எம். மன்னனிடம் இன்று 2- ஆவது நாளாக மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
தமிழக வெற்றி கழகத்தின் மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ மதார் பதுருதீன் என்ற முஸ்தபாவிடம் தவெக ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியாக கொண்டு வரப்படும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரித்து தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்க ரூ. 30 கோடி பேரம் பேசியதாக அதிமுக நிர்வாகி பி.எம். மன்னன் மீது பெரும் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். அத்துடன், இது தொடர்பாக முஸ்தபா எம்எல்ஏ அளித்த புகாரின் அடிப்படையில் மதுரை முன்னாள் துணை மேயரும், அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளருமான பி. எம். மன்னனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்தனர். அவரிடம் குதிரை பேரம் பேசியது தொடர்பாக சுமார் 8 மணி நேரத்துக்கு மேலாக போலீசார் விசாரணை மேற்கொண்டிருந்தனர்.
மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஆஜரான பி.எம்.மன்னன்
இந்த நிலையில், இன்றும் விசாரணைக்கு ஆஜராக கோரி பி.எம். மன்னனுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். அதன் அடிப்படையில், மதுரை விஸ்வநாதபுரத்தில் அமைந்துள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் பி. எம். மன்னன் ஆஜராகினார். அவரிடம் மத்திய குற்றப்பிரிவு மாநகர காவல் துணை ஆணையர் திவ்யா தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக பி. எம். மன்னனை கைது செய்த போலீசார் அவரிடம் 8 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை மேற்கொண்டிருந்தனர்.
மேலும் படிக்க: நீலகிரியில் அதிர்ச்சி.. வனத்துறை ஜீப்பை முட்டி கவிழ்த்த காட்டு யானை.. உயிரை கையில் பிடித்தபடி நடுங்கிய 4 பேர்!




மன்னன் செல்போன் உரையாடல் பதிவுகள் ஆய்வு
இதில், அவரது செல்போன் உரையாடல் பதிவுகள், அவர் தொடர்பு கொண்ட மற்றும் அவரை தொடர்பு கொண்ட நபர்கள் உள்ளிட்ட விவரங்கள் குறித்தும், குதிரை பேரம் பேசியது தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தனர். இந்த விசாரணை முடிவடைந்த நிலையில் அவரை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து சென்றனர். அப்போது, வழக்கை விசாரித்த மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிபதி ஜோசப் ஜாய் சனிக்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பிவிட்டு அதற்கு முந்தைய நாளே அவசர அவசரமாக கைது செய்யப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
சிறையில் அடைக்க மறுப்பு தெரிவித்த நீதிபதி
அத்துடன், அவரை சிறையில் அடைக்க மறுப்பு தெரிவித்த நீதிபதி, ரூ. 25000 சொந்த ஜாமினில் விடுவிக்க உத்தரவிட்டார். அத்துடன், இன்று சனிக்கிழமை போலீசார் விசாரணைக்கு ஆஜராகுமாறு பி. எம். மன்னனுக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், இன்று மதுரை மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஆஜரான பி. எம். மன்னனிடம் போலீசார் பல்வேறு கேள்விகளை எழுப்பி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: திருப்பத்தூரில் 3 பேரை கட்டி போட்டு நகை- பணம் கொள்ளை.. தஞ்சாவூரில் பதுங்கிய முகமூடி கும்பல் கைது.. தனிப்படை அதிரடி!