நீலகிரியில் அதிர்ச்சி.. வனத்துறை ஜீப்பை முட்டி கவிழ்த்த காட்டு யானை.. உயிரை கையில் பிடித்தபடி நடுங்கிய 4 பேர்!
Wild Elephant Attack Forest Jeep : நீலகிரி மாவட்டத்தில் ரோந்து சென்ற வனத்துறை ஊழியர்களின் ஜீப்பை காட்டு யானை ஒன்று ஆக்ரோஷத்துடன் முட்டி தள்ளி சாலையில் கவிழ்த்தது. இந்த சம்பவத்தால் 4 வனத்துறை ஊழியர்கள் பலத்த காயம் அடைந்தனர் .
நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே சோலூர், கோக்கால், சூட்டிங்மட்டம், காடிமந்து, தலப்பதேரி மந்து உள்ளிட்ட பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் கடந்த சில நாட்களாக சுமார் 10 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை ஒன்று சுற்றித்திரிந்து வருகிறது. இந்த யானை அவ்வப்போது காட்டுப்பகுதியில் இருந்து வெளியேறி விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. அதன்படி, கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறுவடைக்கு தயாராக இருந்த கேரட் பயிர்களை காட்டு யானை மிதித்து துவம்சம் செய்தது. இதன் காரணமாக, கேரட் பயிர்களை விளைவித்த விவசாயிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காட்டு யானையை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று வனத்துறைக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஊட்டி 8- ஆவது மைல் பகுதியில் காட்டு யானை
இந்த நிலையில், சம்பவத்தன்று மாலை சாண்டி நல்லா பகுதியில் காட்டு யானை ஒன்று சாலை அருகே நின்று கொண்டிருப்பதாக வனத்துறைக்கு அந்த பகுதி வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் அடிப்படையில், வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, நீலகிரியில் 8- ஆவது மைல் பகுதியில் காட்டு யானை நின்று கொண்டிருந்தது. தோடர் பழங்குடியின கிராமத்துக்கு செல்லும் சிறிய வளைவான மண் சாலையில் வனத்துறையினர் ஜீப்பில் சென்று கொண்டிருந்தனர்.
மேலும் படிக்க: தீபாவளி மது விற்பனை புதிய உச்சத்தை தொடனும்.. மது இல்லை என கூறக்கூடாது.. கூடுதல் சரக்குகளை இருப்பு வைக்க உத்தரவு!
வனத்துறை ஜீப்பை முட்டி கவிழ்த்த காட்டு யானை
அப்போது, வனத்துறை ஜீப் வருவதை பார்த்த காட்டிய அணை சாலையின் குறுக்கே ஜீப்பின் எதிரே நேருக்கு நேர் எதிராக வந்து நின்றது. அப்போது, யானை செல்வதற்கு சாலையில் வழி இல்லாத காரணத்தால் ஆக்ரோஷம் அடைந்த காட்டு யானை வனத்துறையினரின் ஜீப்பை முட்டி தள்ளி கவிழ்த்தது. இதனால் ஜீப்பின் உள்ளே பயணம் செய்த 4 வனத்துறை ஊழியர்கள் காயமடைந்து அலறல் சத்தம் போட்டனர். அவர்களது சத்தத்தை கேட்டு யானை வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பிற வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்த ஊழியர்களை மீட்டு ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
காட்டு யானை தாக்கியது குறித்து வன ஊழியர்
அங்கு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக, வனச்சரகர் ராம் பிரகாஷ் கூறுகையில், நீலகிரியில் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வரும் யானை மிகவும் அமைதியான குணம் கொண்டது. வழக்கமாக தோட்டத்துக்கு வந்தால், லைட் வெளிச்சம் தெரிந்தால் வனப்பகுதிக்குள் சென்று விடும். சம்பவத்தன்று சாலையில் இடம் இல்லாத காரணத்தால் ஜீப்பை முட்டி தாக்கி இருக்கலாம் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: மதுவை வாயில் ஊற்றி.. சிகரெட்டால் சூடு வைத்து சித்ரவதை.. தனி அறையில் அலறிய 3 சிறுவர்கள்.. சென்னையில் ஒருவர் கைது!