AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மத்திய – மாநில உறவுகள் ஆய்வுக்குச் செக்.. நீதிபதி குரியன் ஜோசப் குழுவை திடீரென கலைத்தது தமிழக அரசு!

Tamil Nadu Govt Dissolves Kurian Committee: மத்திய மாநில அரசுகளின் உறவுகள் குறித்து ஆராய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் முந்தைய திமுக அரசால் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவை தற்போது தமிழக அரசு அதிரடியாகக் கலைத்துள்ளது. இந்தக் குழுவின் பணிகள் அனைத்தும் மாநில சட்ட ஆணையத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய – மாநில உறவுகள் ஆய்வுக்குச் செக்.. நீதிபதி குரியன் ஜோசப் குழுவை திடீரென கலைத்தது தமிழக அரசு!
நீதிபதி குரியன் ஜோசப் குழு
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 07 Nov 2026 09:30 AM IST

சென்னை, நவ.07: இந்தியக் கூட்டாட்சி கட்டமைப்பை மறுசீரமைக்கவும், மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்தவும் கடந்த முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் மிக முக்கிய முன்னெடுப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் ஒன்றிய மாநில அரசு உறவுகள் குறித்து ஆராய்வதற்காக ஒரு உயர்மட்டக் குழுவை அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமைத்தார். இக்குழுவில் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அசோகர்த்தன் செட்டி மற்றும் முன்னாள் திட்டக்குழு துணைத் தலைவர் நாகநாதன் உள்ளிட்ட வல்லுநர்கள் இடம்பெற்றிருந்தனர். மாநிலத்தின் உரிமைகளுக்காகவும் கூட்டாட்சித் தத்துவத்தை வலியுறுத்தியும் பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துக்களைக் கேட்டறிந்ததுடன், சர்வதேச அளவிலான கருத்தரங்குகளையும் இக்குழு வெற்றிகரமாக நடத்தியிருந்தது.

இதையும் படிக்க: “19 மாநில போதை மாஃபியாவுக்கு செக்!”.. ‘ஆபரேஷன் டீப் சோர்ஸ்’ மூலம் நெட்வொர்க்கை தகர்த்த தமிழக காவல்துறை!

முதல் தொகுதி அறிக்கையும் அரசியல் கள மாற்றங்களும்:

பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு, குரியன் குழு தனது முதல் தொகுதி அறிக்கையை கடந்த 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 அன்று அப்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கை பின்னர் தமிழ்நாடு சட்டப்பேரவையில் வைக்கப்பட்டு, பொதுமக்களின் பார்வைக்காக இணையதளத்திலும் வெளியிடப்பட்டது. இதற்கிடையில், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியைக் கைப்பற்றியது. புதிய அரசு பொறுப்பேற்றது முதல் குரியன் குழுவின் பணிகளுக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்கப்படவில்லை என்றும், குழுவை முடக்க முயல்வதாகவும் கடந்த செப்டம்பர் மாதத்தில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் தனது கண்டன அறிக்கையைப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

குழு கலைப்புக்கான காரணங்கள்:

இந்நிலையில், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான இந்தக் குழுவை முழுமையாகக் கலைத்து தற்போதைய தமிழக அரசு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அரசாணையைத் தமிழக அரசின் பொதுத்துறை நேற்று இரவு வெளியிட்டுள்ளது. அந்தக் குழுவானது சட்டப்பூர்வமான ஆணையம் அல்ல என்று குறிப்பிட்டுள்ள அந்த அரசாணை, மத்திய மாநில அரசு உறவுகள் குறித்த நடைமுறைச் சட்டங்களை ஆய்வு செய்தல் மற்றும் நிர்வாக அமைப்புகளை மேம்படுத்துதல் போன்ற பணிகள் ஏற்கனவே ‘தமிழ்நாடு சட்ட ஆணையத்தின்’ வரம்பிற்குள் வருவதாகத் சுட்டிக்காட்டியுள்ளது. குரியன் குழுவின் பணிகளுக்கும் தமிழ்நாடு சட்ட ஆணையத்தின் பணிகளுக்கும் இடையில் பெருமளவில் ஒரே மாதிரியான பொறுப்புகள் உள்ளதால், நிர்வாகத் தடையைத் தவிர்க்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: செண்பகத்தோப்பு அணையில் 100 கனஅடி நீர் வெளியேற்றம்.. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.. திருவண்ணாமலை ஆட்சியர்!

ஆவணங்களை ஒப்படைக்கும் பணி:

குரியன் குழுவானது தனது இரண்டாவது அறிக்கையைத் தயாரிக்கும் இறுதிக் கட்டப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்த மிக முக்கியமான காலகட்டத்தில் இந்த திடீர் கலைப்பு நடவடிக்கை அரங்கேறியுள்ளது. இதன் காரணமாக, குழுவின் அலுவலர் வசம் உள்ள அனைத்து ஆவணங்களையும் உடனடியாகத் தமிழ்நாடு சட்ட ஆணையத்திடம் ஒப்படைக்குமாறு அரசாணையில் உத்தரவிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் மிக முக்கியக் கூட்டாட்சி உரிமைகள் மற்றும் உறவுகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வந்த ஒரு உயர்மட்டக் குழு திடீரெனக் கலைக்கப்பட்டு, அதன் பொறுப்புகள் சட்ட ஆணையத்திற்கு மாற்றப்பட்டுள்ள இந்த நிகழ்வு தமிழக அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Follow Us