‘சீன்’ பட ரிலீஸ்.. திருவிழா கோலம் பூண்ட கோவை.. மேளதாளங்களுடன் கேக் வெட்டி சூர்யா ரசிகர்கள் மாஸ் கொண்டாட்டம்!!
Suriya’s 'Scene' Movie Released Today: நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'சீன்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. 'கருப்பு', 'விஸ்வநாத் சன்ஸ்' வெற்றிப் படங்களைத் தொடர்ந்து வெளியான இப்படத்திற்கு காலை 6 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து, கோவையில் சூர்யா நற்பணி இயக்கத்தினர் கேக் வெட்டி, பட்டாசு வெடித்து திருவிழா போல் கொண்டாடினர்.
கோவை, நவ.06: தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள ‘சீன்’ திரைப்படம் இன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. ஏற்கனவே அவரது நடிப்பில் வெளியான ‘கருப்பு’ மற்றும் ‘விஸ்வநாத் சன்ஸ்’ ஆகிய திரைப்படங்கள் தொடர்ச்சியாக மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்ததைத் தொடர்ந்து, இந்த ‘சீன்’ திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் மத்தியில் அளப்பரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது. திரையரங்குகளில் படம் வெளியானதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சூர்யா ரசிகர்கள் திருவிழா போலக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
காலை 6 மணி சிறப்புக் காட்சி:
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சூர்யா நடித்த திரைப்படத்திற்கு காலை 6 மணிக்கே சிறப்புக் காட்சி திரையிட அனுமதி வழங்கப்பட்டதால், அதிகாலையிலேயே ரசிகர்கள் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் திரையரங்கு வளாகங்களில் பெருந்திரளாகக் கூடத் தொடங்கினர். குறிப்பாக, இந்த முதற்காட்சியைப் காண்பதற்காகப் பெண்களும் குடும்ப ரசிகர்களும் பெருமளவில் திரையரங்குகளுக்கு வருகை தந்து படத்தை ஆர்வத்துடன் கண்டு களித்தது இத்திரைப்பட வெளியீட்டின் முக்கிய சிறப்பம்சமாக அமைந்தது. திரையரங்குகளில் நிலவிய இந்த அபரிமிதமான கூட்டமும் உற்சாகமும் சூர்யாவின் மாஸ் வரவேற்பை மீண்டும் நிரூபிக்கும் வகையில் அமைந்திருந்தது.
