பாட்னாவில் இருந்து லக்னோ நோக்கிச் சென்ற இண்டிகோ விமானம், ஆலங்கட்டி மழையால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவில் புதன்கிழமை பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் விமானத்தின் முன்பகுதியில் உள்ள ரேடோம் (Radome) சேதமடைந்தது. 104 பயணிகள் மற்றும் 6 விமானப் பணியாளர்களுடன் சென்ற இந்த விமானம், திட்டமிட்ட நேரத்திற்கு 8 நிமிடங்களுக்கு முன்னதாகவே தரையிறங்கியது. இதில் பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். விமானம் 17,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது ஆலங்கட்டி மழையால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விமானம் இயக்கத்திலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பான டிஜிசிஏ (DGCA), சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. தேவையான பராமரிப்புப் பணிகள் முடிந்து, ஒழுங்குமுறை அமைப்புகளின் அனுமதி கிடைத்த பிறகே விமானம் மீண்டும் இயக்கப்படும் என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த மாதமும், கவுகாத்தியில் இருந்து பெங்களூரு சென்ற இண்டிகோ விமானம் தரையிறங்கும்போது ஓடுபாதையில் வழக்கத்திற்கு மாறான மோதலைச் சந்தித்து, அதன் வால் பகுதி பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.