“19 மாநில போதை மாஃபியாவுக்கு செக்!”.. ‘ஆபரேஷன் டீப் சோர்ஸ்’ மூலம் நெட்வொர்க்கை தகர்த்த தமிழக காவல்துறை!
Operation Deep Source Tamil Nadu police: தமிழக காவல்துறை நடத்திய 'ஆபரேஷன் டீப் சோர்ஸ்' (Operation Deep Source) சோதனையில், 19 மாநிலங்களுக்குப் போதை மாத்திரைகளைக் கடத்திய மிகப்பெரிய நெட்வொர்க் முறியடிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் பதுங்கியிருந்த முக்கியக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நவம்பர், 07: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சந்தேகத்திற்கிடமான முறையில் தபால் மற்றும் கூரியர் சேவைகள் மூலம் போதைப்பொருட்கள் அனுப்பப்படுவதைக் கண்டறிந்து சுதாரித்த காவல்துறை, மாநிலத்தைத் தாண்டி நாடு முழுவதும் பரந்து விரிந்திருந்த ஒரு மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் வலையை வேரோடு பிடுங்கி எறிந்துள்ளது. தென் மண்டலக் காவல்துறை முன்னெடுத்த துல்லியமான மற்றும் நீண்ட காலத் திட்டமிடல் கொண்ட இந்த நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் டீப் சோர்ஸ்’ (Operation Deep Source) எனப் பெயரிடப்பட்டுள்ளது. தபால் பார்சல் மூலமாக ரகசியமாகத் தொடர்ச்சியாக நடைபெற்ற வந்த இந்த நச்சு வர்த்தகத்தின் வேர்களைத் தேடிச் சென்ற காவல்துறையினர், தற்போது ஹரியானா மாநிலம் அம்பாலா கன்டோன்மென்ட் பகுதியில் பதுங்கியிருந்த முக்கியக் குற்றவாளிகளைக் கைது செய்து மாபெரும் சாதனையைப் படைத்துள்ளனர்.
இதையும் படிக்க: 20 நாட்களில் 7 கொலைகள்.. செல்போனில் அழைத்து மனைவி குடும்பத்தை காலி செய்த டாக்ஸி ஓட்டுநர்!
சோதனையில் வெளிவந்த திடுக் உண்மைகள்:
கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்ட இந்த ஆபரேஷனின் முக்கியத் திருப்புமுனையாக, கடந்த ஆகஸ்ட் 18 அன்று தேனி மாவட்டம் கந்தமனூர் பகுதியில் சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஒரு சந்தேகத்திற்கிடமான தபால் பார்சல் அமைந்தது. அதனைத் தொடர்ந்து திண்டுக்கல், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இதுபோன்ற பார்சல்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து காவல்துறையினர் விரிவான விசாரணையில் இறங்கினர். இந்த அனைத்துக் கடத்தல் பார்சல்களும் ஹரியானா மாநிலம் அம்பாலா கன்டோன்மென்ட்டில் இருந்து அனுப்பப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தபால் மற்றும் தனியார் கூரியர் கணக்குகளை ஆய்வு செய்ததில், கடந்த ஒரு மாதம் மட்டும் அங்கிருந்து 588 பார்சல்கள் நாட்டின் 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அதிர்ச்சிகரமான தகவல் வெளிச்சத்திற்கு வந்தது.
போதை மாத்திரைக் கடத்தலின் செயல்முறை:
இந்த நெட்வொர்க் மூலம் டெபண்டாடோல் (Tapentadol) மற்றும் டைடால் (Tydol) போன்ற வீரியமிக்க போதை மாத்திரைகள் ரகசியமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஹரியானாவின் மோகன் நகர், நநேரா பகுதியைச் சேர்ந்த மகேந்தர் சிங் பிஸ்ட் என்பவர் இந்த மாத்திரைகளைத் தபால் மூலம் அனுப்புவதை முக்கியமாகக் கையாண்டு வந்துள்ளார். மேலும், ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த சுனில் குமார் என்பவருடன் இணைந்து இவர் தமிழகத்திற்குப் போதைப்பொருட்களை விநியோகித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. தங்களை அடையாளம் காணாமல் இருக்கப் போலியான அடையாளங்கள் மற்றும் முகவரிகளைப் பயன்படுத்தி வந்த இந்தக் கும்பலைத் தந்திரமாகப் பின்தொடர்ந்த தனிப்படை போலீசார், கடந்த நவம்பர் 2 அன்று ஹரியானாவிற்குச் சென்று மகேந்தர் சிங் பிஸ்ட் மற்றும் சுனில் குமார் ஆகிய இருவரையும் அதிரடியாகக் கைது செய்தனர்.
இதையும் படிக்க: தமிழக அரசு வங்கி கணக்கை ஹேக் செய்த கேரள சைபர் கும்பல்.. கருவூலக் கணக்கை முடக்கி ரூ.11 லட்சம் திருட்டு!
காவல்துறை உயர் அதிகாரியின் எச்சரிக்கை:
இதுவரை தமிழகத்தில் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளடன், 4,400 போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரம் குறித்துப் பேசிய தமிழக தென் மண்டலக் காவல்துறை ஐ.ஜி. விஜேந்திர பிதாரி, கடத்தலின் கடைசி நபரைப் பிடிப்பதை விட, அதன் மூல வேரைத் தேடிச் சென்று முழு நெட்வொர்க்கையும் அழிப்பதே தங்களது முதன்மை நோக்கம் என்று தெரிவித்தார். தற்பொழுது பிடிபட்ட குற்றவாளிகளின் நிதிப் பரிமாற்றங்கள், வங்கி கணக்குகள் மற்றும் பிற மாநிலத் தொடர்புகள் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. நாட்டின் பல மாநிலங்களை உலுக்கியுள்ள இந்த ஊடுருவல் குறித்துப் பெறப்பட்ட முக்கியத் தகவல்கள் மற்ற மாநிலப் புலனாய்வு அமைப்புகளுடனும் பகிரப்பட்டு வருவதால், இத்துறைசார்ந்த மேலும் பல அதிரடித் திருப்பங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.