மதுவை வாயில் ஊற்றி.. சிகரெட்டால் சூடு வைத்து சித்ரவதை.. தனி அறையில் அலறிய 3 சிறுவர்கள்.. சென்னையில் ஒருவர் கைது!
Chennai Man Arrested : சென்னையில் 3 சிறுவர்களை ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்று கட்டாயப்படுத்தி மது வை வாயில் ஊற்றி, சிகரெட்டால் சூடு வைத்து சித்ரவதை செய்த நபரை காசிமேடு போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர் .
சென்னை மாவட்டம், காசிமேடு பகுதியை சேர்ந்த 3 சிறுவர்கள் அந்த பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென மூன்று சிறுவர்களும் மாயமாகினர். இதை அறிந்த சிறுவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சுற்றுவட்டார பகுதிகளில் தேட தொடங்கினர். இதில், அதே பகுதியில் வசித்து வரும் விக்ரம் ( 38 வயது) என்பவர் சிறுவர்களை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து, அந்த நபரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட பெற்றோர்கள் சிறுவர்கள் குறித்து விசாரித்தனர். இதனால், அச்சம் அடைந்த விக்ரம் மூன்று சிறுவர்களையும் ராயபுரம் பகுதியில் ஆட்டோவில் அழைத்துச் சென்று இறக்கி விட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றதாக தெரிகிறது. அதன்படி, சம்பவ இடத்திற்கு சென்ற பெற்றோர்கள் 3 சிறுவர்களையும் மீட்டு வீட்டுக்கு அழைத்து வந்தனர்.
தீபாவளி பட்டாசு தருவதாக கூறி அழைத்து சென்ற நபர்
அவர்களிடம் நடந்த சம்பவம் குறித்து பெற்றோர்கள் விசாரித்த போது, சிறுவர்கள் அதிர்ச்சி தகவல்களை தெரிவித்தனர். இதில், சிறுவர்கள் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, விக்ரம் தீபாவளி பட்டாசு மற்றும் புதிய கைகடிகாரம் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை உண்மை என நம்பிய சிறுவர்கள் அவர் கூறியதை கேட்டு அவருடன் சென்றுள்ளனர். அவர்களை சென்னை சென்ட்ரல் பகுதியில் உள்ள தனி அறைக்கு விக்ரம் அழைத்து சென்றுள்ளார்.
மேலும் படிக்க: தென்காசியில் எரிந்த நிலையில் பெண் சடலம்.. நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி… போலீசார் விசாரணை!




மதுவை வாயில் ஊற்றி சிகரெட்டால் சூடு வைத்து சித்ரவதை
அங்கு, அவரை குளிப்பாட்டி மசாஜ் செய்யும்படி கட்டாயப்படுத்தி கொடுமைப்படுத்தி உள்ளார். இதனால், நாங்கள் கடும் அதிர்ச்சி அடைந்தோம். அத்துடன் மதுவை சிறுவர்களின் வாயில் வலுக்கட்டாயமாக ஊற்றியும், சிகரட்டை புகைக்கும் படியும் கூறி விக்ரம் சித்திரவதை செய்துள்ளார். மதுவை குடிக்க மறுத்த சிறுவர்களையும், சிகரெட் புகைக்க மறுத்த சிறுவர்களையும் சிகரெட்டால் உடலில் சூடு வைத்து விக்ரம் கொடுமை செய்துள்ளார். அந்த சிறுவர்கள் எவ்வளவோ கெஞ்சியும் அவர்களை விக்ரம் விடுவிக்க மறுத்துள்ளார்.
தலைமறைவான நபரை தட்டி தூக்கிய காசிமேடு போலீஸ்
இந்த தகவலை கேட்டு பெற்றோர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக சிறுவர்களின் பெற்றோர்கள் காசிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அத்துடன், காசிமேடு பகுதியில் பதுங்கி இருந்த விக்ரமை போலீசார் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்க: இலங்கை கடற்படையால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது.. 1 மாத சிறை வாசத்துக்கு பின் விடுதலை.. தமிழகம் வந்தடைந்த 8 மீனவர்கள்!