ரூ.1427 கோடி மணல் குவாரி முறைகேடு.. துரை முருகன் மீது பாய்ந்த வழக்கு.. திமுகவில் அடுத்த கைதா?
Sand Quarrying Scam : திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் அதிகளவு மணல் எடுத்ததில் அரசுக்கு ரூ. 1427 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக திமுக பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரை முருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் .
திமுக ஆட்சியில் மணல் கொள்ளை, முறைகேடு தொடர்பாக எழுந்த புகாரில் திமுக பொதுச் செயலாளர், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் உள்ளிட்ட 27 பேர் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தரப்பில் கூறுகையில், அமலாக்கத்துறை மற்றும் அறப்போர் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் வெங்கடேசன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன், ஓய்வு பெற்ற முதன்மை தலைமை பொறியாளர்கள் முத்தையா, ராமமூர்த்தி மற்றும் நீர்வளத் துறையை சேர்ந்த 14 ஊழியர்கள் உள்ளிட்டோர் என 27 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2021 முதல் 2024- ஆம் காலகட்டத்தில் திமுக ஆட்சியில் பல்வேறு இடங்களில் உள்ள 28 குவாரிகளில் ஆற்று மணல் எடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டிருந்தது.
ரூ.1427 கோடிக்கும் மேலாக நிதியிழப்பு புகார்
இதில் ஊழல் மற்றும் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாகவும், டெண்டர் முறைக்கு பதிலாக வரையறுக்கப்பட்ட டெண்டர் மூலம் ஒப்பந்தங்களை வழங்கி கனிம திட்டத்தின் வரைமுறைகளுக்கு அப்பாற்பட்டு மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேலாக சட்ட விரோத ஆற்று மணல் எடுக்கப்பட்டு அனுமதி சீட்டு என்ற பெயரில் பற்று சீட்டுகளை போலியாக தயாரித்து மணல் கொள்ளை நிகழ்ந்துள்ளது. இதன் மூலம், அரசுக்கு ரூ.1427 கோடிக்கும் மேலாக இழப்பு ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது.
மேலும் படிக்க: திமுகவினர் திராவிடம் பேசுவதே கொள்ள அடிக்கதான்.. ஊழல்வாதிகளை கூண்டோடு கைது செய்க.. மெயின் பாயிண்டில் கை வைத்த மாணிக்கம்!




லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்
இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஒரு பகுதியாக சென்னை, திருச்சி, வேலூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, சேலம், நாமக்கல், கோயம்புத்தூர் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 34 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனைகளில் மணல் கொள்ளை வழக்கு விசாரணையுடன் தொடர்புடைய குற்றத்தை நிரூபிக்கும் 825 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. அத்துடன் 11 மின்னனு சாதனங்கள் மற்றும் 3 வங்கி லாக்கர் சாவிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
அடுத்தடுத்து வழக்குகளில் சிக்கும் திமுக EX அமைச்சர்கள்
அதன் அடிப்படையில் மணல் கொள்ளை புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு மேலும் முகாந்திரம் கிடைத்தது. அதன் அடிப்படையில், திமுக பொதுச் செயலாளர், முன்னாள் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் உள்ளிட்டோர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் அதிரடியாக வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே, பள்ளிக் கல்வித் துறை ஊழலில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மின்சார துறை ஊழலில் செந்தில் பாலாஜி, நகராட்சி நிர்வாக பணி முறைகேட்டில் கே. என். நேரு ஆகியோர் சிக்கி உள்ள நிலையில், தற்போது துரைமுருகனும் சிக்கியுள்ளார்.
மேலும் படிக்க: ஊழல் உலகமாக மாறிய பெரியார் அறிவுலகம்.. மக்கள் மன்றத்தில் திமுக நிரந்தரமாக தலை குனிவது உறுதி.. முதல்வர் விஜய் அட்டாக்!